தேர்தல் பத்திரத்தில் நிதி கொடுத்தவரின் பட்டியல் வெளியானது.. உச்சநீதிமன்றம் நாளை மீண்டும் விசாரணை
டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கின் விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறுகிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளைய வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கியில் வழங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை இருந்தது.

இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது என அறிவித்தது.
அதுமட்டுமின்றி எஸ்பிஐ இனி தேர்தல் பத்திரம் முறையை கைவிட வேண்டும். 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவித்தது. ஆனால் எஸ்பிஐ விபரங்களை வழங்க காலஅவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
அதாவது 2024 ஜுன் மாதம் 30ம் தேதி வரை தேர்தல் பத்திரம் விபரங்களை வழங்க காலஅவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கூறியது. ஆனால் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் விபரங்களை வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி கடந்த 12ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது. எஸ்பிஐ வழங்கிய விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், வாங்கி நபர்கள் மற்றும் அவர்கள் வழங்கிய நன்கொடை விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் எந்தெந்த நிறுவனங்கள், எந்தெந்த தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கி உள்ளனர் என்ற விபரம் தற்போது பொதுமக்கள் பார்வைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. நாளைய வழக்கு விசாரணையின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் அதில் தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கும் இடம்பெற்றுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உள்பட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications