கைகள் நடுங்கியது பார்த்தீங்களா.. அமித்ஷா மனஅழுத்தத்தில் உள்ளார் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
டெல்லி: ‛‛நாடாளுமன்றத்தில் நேற்று அமித்ஷா மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கைகள் நடுங்கின. தவறான மொழியை பயன்படுத்தினார். அதனை ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. அவர் (அமித்ஷா) மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தார்'' என்று ராகுல் காந்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக பேசினார். அதன்பிறகு பிற உறுப்பினர்கள் பேசினர்.

நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்து பேசினார். அப்போது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கவில்லை. இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் பல முறை நடந்துள்ளது. சோனியா காந்தி நம் நாட்டின் குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே ஓட்டளித்தார். வாக்கு திருட்டை காங்கிரஸ் கட்சி தான் முதல் முதலில் செய்துள்ளது என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், தான் அமித்ஷாவின் கருத்துக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று பதிலளித்தார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛அமித்ஷா, நேற்று நாடாளுமன்றத்தில் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கைகள் நடுங்கின. தவறான மொழியை பயன்படுத்தினார். அதனை ஒட்டுமொத்த நாடும் பார்த்தது. அவர் (அமித்ஷா) மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தார். ‛வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க அமித் ஷாவுக்கு சவால் விடுத்து இருந்தேன். ஆனால் அதற்கு அவரது பதில் இன்னும் கிடைக்கவில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications