கோபத்தின் உச்சத்திற்கே போன அமித் ஷா.. ஜெய்சங்கர் பேசும்போது. சட்டென எழுந்து ஆவேசம்! என்ன நடந்தது?
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இப்போது விவாதம் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர்கள் இது தொடர்பாக விளக்கமளித்து வருகிறார்கள். இதற்கிடையே அமைச்சர் ஜெய்சங்கர் பேசிக் கொண்டு இருந்தபோது சட்டென உள் துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah about Operation Sindoor) எழுந்தார். பார்க்கும்போதே அவர் கோபத்தில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்போது அமைச்சர் அமித் ஷா காட்டமாக சில கருத்துகளையும் கூறினார். அமித் ஷா திடீரென கோபப்பட என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா அழித்தது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே சில நாட்கள் மோதல் தொடர்ந்தது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிய நிலையில், மோதல் முடிவுக்கு வந்தது.

ஆபரேஷன் சிந்தூர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இப்போது நடந்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று இன்று காலை ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கியது. முதலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்த விளக்கத்தை அளித்தார்.
தொடர்ந்து இன்று மாலை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்துர் குறித்து லோக்சபாவில் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டு இருந்தனர். இதனால் கோபமடைந்த அமித் ஷா, சட்டென எழுந்து எதிர்க்கட்சிகளை மிகக் காட்டமாக விமர்சித்தார்.
ஜெய்சங்கர்
அதாவது அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடிக்கும், டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே "ஆபரேஷன் சிந்துர்" சமயத்தில் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை இரு தலைவர்களுக்கும் இடையில் எந்த தொலைப்பேசி உரையாடலும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அப்போதுதான் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்
சட்டென எழுந்த அமித் ஷா
இதையடுத்து திடீரென எழுந்த அமித் ஷா, "எதிர்க்கட்சிகள் தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரை நம்புவதில்லை. ஆனால் வேறு சில நாடுகளை நம்புகிறார்கள் என்பதில் எனக்கு ஆட்சேபம் உள்ளது. அவர்களின் கட்சியில் வெளிநாட்டினருக்கு முக்கியத்துவம் இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அவர்களின் கட்சியின் விஷயங்களை எல்லாம் இங்கு அவையில் திணிக்கக் கூடாது. அதனால்தான் அவர்கள் அங்கு (எதிர்க்கட்சி வரிசை) அமர்ந்திருக்கிறார்கள். இன்னும் 20 வருடங்களுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள்" என்று அமித் ஷா காட்டமாகக் கூறினார்.
முக்கிய விளக்கம்
தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் சில முக்கிய விளக்கங்களை அளித்திருந்தார். டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததாகக் கூறப்படும் செய்திகளைத் திட்டவட்டமாக மறுத்த ஜெய்சங்கர், அமெரிக்காவுடனான இந்தியாவின் பேச்சுவார்த்தைகள் குறித்து விளக்கினார். அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தான் முதலில் பிரதமர் மோடியைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும் பாகிஸ்தான் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக வான்ஸ் பிரதமர் மோடியிடம் கூறியதாகவும் ஜெய்சங்கர் கூறினார். அதற்கு இந்தியா இன்னும் வலுவாகப் பதிலடி கொடுக்கும் என்று மோடி பதிலளித்ததாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
திட்டவட்டமாகச் சொன்ன ஜெய்சங்கர்
மேலும், இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ மூலம் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தப் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தால் மட்டுமே அதைப் பரிசீலிக்க முடியும் என்பதை இந்தியா அனைத்து நாடுகளுக்கும் தெளிவுபடுத்தியதாக ஜெய்சங்கர் கூறினார். மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் நடத்திய தொடர் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். மே 10ஆம் தேதி, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகப் பல நாடுகள் இந்தியாவிற்குத் தகவல் தெரிவித்ததாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
இது ரொம்ப தவறு
அப்போது எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் தொடர்ந்ததால், மீண்டும் அமித் ஷா குறுக்கிட்டுப் பேசினார். அமித் ஷா பேசுகையில், "அவர்களுடைய தலைவர்கள் பேசும்போது, நாங்கள் பொறுமையாகக் கேட்டோம்.. நாளை அவர்கள் எத்தனை பொய்களைச் சொன்னார்கள் என்று நான் பட்டியலிடுவேன். இப்போது, அவர்களால் உண்மையைச் சகிக்க முடியவில்லை. இவ்வளவு முக்கியமான பிரச்சனை விவாதிக்கப்படும்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் பேசும்போது, இதுபோல இடையூறு செய்வது சரியா?" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications