என்னது குஜராத்தில் ஆம் ஆத்மி போட்டியிடுதா? தேர்தலுக்கு பின் நிலைமை தெரியும்: அமித்ஷா நம்பிக்கை
டெல்லி: குஜராத்தில் மும்முனைப் போட்டியா? இருமுனைப் போட்டியா? என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தெரியத்தான் போகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
குஜராத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகதான் ஆட்சியில் இருந்து வருகிறது. அத்துடன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம். ஆகையால் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக.

பாஜக வெல்லும் சாத்தியம்
குஜராத் களநிலவரங்களைப் பொறுத்தவரையில் பாஜக உறுதியாக வெல்லும் என்கின்றன கருத்து கணிப்புகள். கடந்த தேர்தல்களை விட அதிக இடங்களில் பாஜக வெல்லும் என்கின்றன இக்கணிப்புகள். அதேநேரத்தில் கணிசமான இடங்களைப் பெறாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தை ஆம் ஆத்மி பெறும்; இது காங்கிரஸுக்கு கடும் பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தோல்வியே இல்லையே
இந்நிலையில் குஜராத் தேர்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது: குஜராத் தேர்தலில் 1990-க்குப் பின் நாங்கள் தோற்றதாக சரித்திரம் இல்லை. அது லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலாக இருந்தாலும் இதுதான் நிலைமை. குஜராத் வாக்காளர்கள் எங்களை எப்போதும் ஆசீர்வதிக்கக் கூடியவர்கள்.

மும்முனைப் போட்டியா?
குஜராத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது என்கின்றனர். குஜராத் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அது மும்முனைப் போட்டியா? இல்லையா? என்பது நிச்சயம் தெரியவரும். எங்களைப் பொறுத்தவரை தேர்தலுக்காக நாங்கள் போட்டியிடவில்லை. நாங்கள் மக்களின் மேம்பாட்டுக்காக, வளர்ச்சிக்காக போட்டியிடுகிறோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி நடைபெற்றால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்பது குஜராத் மக்களுக்கு தெரியும்.

10 ஆண்டுகளுக்கான செயல் திட்டம்
குஜராத் மாநிலத்தின் அடுத்த 10 ஆண்டுகாலம் எப்படியானதாக இருக்க வேண்டும் என்கிற செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். ஆகையால்தான் பாஜகவினரை ஆதரிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். குஜராத் மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக, நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு. இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications