பேரிடர் நிவாரண நிதியை பயன்படுத்தி மாநில அரசுகள் இலவசங்களை வழங்க கூடாது: அமித்ஷா எச்சரிக்கை!
டெல்லி: மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகள் இலவசங்கள் வழங்குவதற்காக பயன்படுத்தக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ.4,000 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் பேரிடர் மேலாண்மை சட்ட திருத்த மசோதா மீதான விவாதங்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று பதிலளித்து பேசியதாவது: பேரிடர் மேலாண்மையில் மத்திய அரசு, மாநில அரசுகள், பஞ்சாயத்து அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் நரேந்திர மோடி அரசின் விருப்பம். பேரிடர் மேலாண்மையில் அதிகாரத்தை மத்திய அரசு தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் எதுவுமே இல்லை.

உலக நாடுகள் பேரிடர் மேலாண்மையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என 10 அம்ச திட்டத்தை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார். இதனை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போதைய மத்திய அரசின் இந்த சட்ட திருத்த மசோதாவானது அனைத்து நிர்வாக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை பேரிடர் மேலாண்மையில் உறுதி செய்கிறது.
மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரண நிதியானது 2004-ம் ஆண்டு முதல்
2014-ம் ஆண்டு வரை ரூ38,000 கோடியாக இருந்தது; கடந்த 10 ஆண்டுகளில் இந்த நிதியானது ரூ.1.24 கோடியாக உயர்ந்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு முந்தைய 10 ஆண்டுகளில் ரூ.28,000 கோடி ஒதுக்கப்பட்டது; கடந்த 10 ஆண்டுகளில் ரூ.80,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியில் இருந்து மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 மடங்கு அதிகமாகவே கொடுத்துள்ளது.
பிரதமர் நிவாரண நிதி என்பது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. இந்த பிரதமர் நிவாரண நிதியை ராஜீவ் காந்தி அறக்கட்டளைகூட பெற்றிருக்கிறது. இதனால்தான் பிரதமர் கேர் திட்டத்தை நரேந்திர மோடி உருவாக்கினார்.
மாநில அரசுகளுக்கு பேரிடர் நிவாரண நிதியை வழங்குவதில் எந்த பாரபட்சமும் அரசியல் பார்வையுமே இல்லை. கர்நாடகா மாநிலத்துக்கு மத்திய குழு, ரூ.5,800 கோடி வழங்க பரிந்துரைத்தது. மத்திய அரசு ரூ.5,000 கோடி அளித்தது. தமிழ்நாட்டுக்கு மத்திய குழு ரூ.4817 கோடி வழங்க பரிந்துரைத்தது. மத்திய அரசு ரூ.4,000 கோடி வழங்கியிருக்கிரது. கேரளாவுக்கு ரூ.3743 கோடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது; மத்திய அரசு ரூ.2438 கோடியை கொடுத்திருக்கிறது இவ்வாறு மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மேலும் இந்த பதிலுரையின் போது எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் தந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, மாநில அரசுகள்- பேரிடர் நிவாரண நிதியை வைத்துக் கொண்டு இலவச திட்டங்களை செயல்படுத்தக் கூடாது எனவும் கண்டிப்புடன் கூறினார்.












Click it and Unblock the Notifications