வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.. நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பாமக! உறுதி செய்தார் அன்புமணி
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், பாமக இதில் பங்கேற்கும் என்று கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 1927ம் ஆண்டு நாடாளுமன்றம் கட்டப்பட்டது. பின்னர் இது கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கமும் செய்யப்பட்டது. ஆனாலும், இதில் இடப்பற்றாக்குறை நீடித்து வருவதால் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2020ம் ஆண்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.

இதனையடுத்து திட்டமிட்டவாறு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ்கள் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் குடியரசு தலைவரின் பெயர் இடம்பெறவில்லை. இந்த புதிய கட்டிடத்தையும் பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைக்கிறார்.
இதனை எதிரக்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. மட்டுமல்லாது இந்த கட்டிட திறப்பு விழாவில் தாங்களும் பங்கெடுக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்க போவதில்லை என்று கூறியிருந்தன. ஆனால் அதிமுக இதில் பங்கேற்பதாக தெரிவித்திருந்தது. இதனையடுத்து தற்போது பாமகவும் இந்த திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்போவதாக கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில், "தில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்" என்று கூறியுள்ளார்.
தேசிய அளவில் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக என 19 கட்சிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications