'மக்களை மருத்துவமனையில் அனுமதிக்கக்கூட முடியவில்லை.. ஆனால் ஐபிஎல்-க்கு இவ்வளவு செலவழிக்க முடிகிறதா?'
டெல்லி: ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள் தற்போது பாதுகாப்பாக இருந்தாலும், இது எவ்வளவு காலம் தொடரும் என தெரியவில்லை என கூறியுள்ள ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை, பொதுமக்களை மருத்துவமனைகளில்கூட அனுமதிக்க முடியாத நிலையில் ஐபிஎல் தொடருக்கு எப்படி இவ்வளவு தொகையைச் செலவு செய்ய முடிகிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் பெரும்பாலான மருத்துவமனைகளும் நிரம்பிவிட்டன.
அதேபோல பல்வேறு நகரங்களிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளிலேயே உயிரிழக்கும் அவல சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கில்கிறிஸ்ட் விமர்சனம்
நாட்டில் நிலைமை இப்படி நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்லும்போது, ஐபிஎல் போட்டிகள் மட்டும் தொடர்ந்து நடைபெறுகிறது. இது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர கில்கிறிஸ்ட், இந்தியாவில் கொரானா பாதிப்பு அச்சமூட்டுகிறது. ஆனாலும்கூட ஐ.பி.எல் தொடர் நடைபெறுகிறது. மக்களை ஒவ்வொரு நாளும் திசைதிருப்பப் போட்டிகள் நடத்தப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

எப்படி இவ்வளவு செலவிட முடிகிறது
அவரைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு வீரரான ஆண்ட்ரூ டையும் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவதை விமர்சித்ததுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்தியர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, பொதுமக்களை மருத்துவமனைகளில்கூட அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்போது, இந்த அணிகளும் அரசும் மட்டும் ஐபிஎல் தொடருக்கு எப்படி இவ்வளவு தொகையைச் செலவு செய்ய முடிகிறது?

போட்டிகள் தொடரலாம்
ஆனால், அதேநேரம் மக்களின் மன அழுத்தத்தை விளையாட்டுப் போட்டிகள் குறைக்கிறது என்றால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படலாம். இது பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளி தரலாம். அப்படியிருந்தால் போட்டிகள் தொடர்ந்து நடைபெறலாம். ஆனால், இந்தியாவில் இப்போது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு புரிகிறது

பாதுகாப்பு எவ்வளவு நாள் நீடிக்கும்
ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் தற்போது பாதுகாப்பாகவே உள்ளோம். ஆனால், இந்தப் பாதுகாப்பு எவ்வளவு காலம் தான் நீடிக்கும் என்பதுதான் கேள்வி. எனது சொந்த நாடன ஆஸ்திரேலியாவிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவிலிருந்து வரும் அனைவருக்கும் தடை விதித்து உத்தரவிடுவார்களோ என்ற அச்சம் எனக்கு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய வீரர்கள் விலகல்
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல முக்கிய வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி வருகின்றனர். டெல்லி அணியின் அஸ்வின், பெங்களூரு அணியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சார்ட்ஸன், ராஜஸ்தான் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன் ஆகியோர் இதுவரை விலகியுள்ளனர்.

திட்டமிட்டபடி நடைபெறும்
முன்னணி வீரர்கள் தொடர்ந்து விலகி வருவதால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்; அல்லது தற்காலிகமாக தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவியது. இருப்பினும், ஐபிஎல் போட்டிகளைத் தள்ளி வைக்கும் எண்ணம் இல்லை என்றும் அனைத்து போட்டிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பிசிசிஐ தலைவர் கங்குலி நேற்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications