டெல்லியிடம் பேசிக்கொள்ளுங்கள்.. நேரடியாக சொன்ன அண்ணாமலை.. ஓபிஎஸ்ஸை மதிக்கலையாம்.. "பளீர்" பாண்டியன்
ஓ பன்னீர்செல்வத்திற்கு அரசியல் ரீதியாக அவருக்கு பலமே இல்லை. அதனால்தான் அவரால் கட்சி நிர்வாகிகளை தனக்கு பின் கொண்டு வர முடியவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை அண்ணாமலை மதிக்கவில்லை, ஆதரவு கேட்டு போன ஓ பன்னீர்செல்வத்திடம், டெல்லியிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து ஈரோடு கிழக்கில் போட்டியிட வேண்டாம். அதிமுகவின் பொது வேட்பாளரை ஆதரிப்போம் என்று பாஜக முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வமிற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.
அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டிஅளித்துள்ளார் .

பேட்டி
அவர் தனது பேட்டியில்,. பாஜக ஓ பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டது. பாஜகவின் ஆதரவை கேட்டு அண்ணாமலையை சந்திக்க ஓ பன்னீர்செல்வம் கூட இல்லை. அண்ணாமலைக்கு ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் வயது கூட இல்லை. ஆனால் ஓ பன்னீர்செல்வம் பார்க்க சென்ற போது அண்ணாமலை அந்த அலுவலகத்தில் கூட இல்லை. கொஞ்சமாவது மரியாதை வேண்டாமா? ராமதாஸ் முன்னாள் முதல்வர் எல்லாம் கிடையாது. ஆனால் ராமதாஸ் கூட்டணிக்கு வந்த போது ஜெயலலிதா தனது அலுவலகத்தில் வாசல் வரை வந்து அவரை வரவேற்றார். கருணாநிதியை பார்க்க ராமதாஸ் போன போது கருணாநிதியும் கூட வாசல் வரை வருவார். அவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய லீடர்.

பெரிய தலைவர்
எவ்வளவு பெரிய தலைவர்கள் அவர்கள் எல்லாம். டெல்லியில் ஆட்சியையே கலைத்தவர் ஜெயலலிதா. ஆனால் ஓ பன்னீர்செல்வம் வந்த போது அவரை வரவேற்க கூட அண்ணாமலை அலுவலகத்தில் இல்லை. அண்ணாமலை மூன்று முறை முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வத்தை மதிக்கவில்லை. ஆதரவு கேட்டு போன ஓ பன்னீர்செல்வத்திடம், டெல்லியிடம் பேசிக்கொள்ளுங்கள். டெல்லியிடம் ஆதரவை பற்றி பேசுங்கள் என்று அண்ணாமலை கூறி இருக்கிறார். அதன்பின் ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்த போது அண்ணாமலை மரியாதைக்கு கூட செய்தியாளர் சந்திப்பில் நிற்கவில்லை. இதில் அண்ணாமலையை நான் குறை சொல்லவில்லை.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வத்தைத்தான் குறை சொல்வேன். ஓ பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு இவ்வளவுதான். அவருக்கு இதற்கு மேல் செல்வாக்கு இல்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? கூட்டணி பெயரை மாற்றினார்.. மோடி, அண்ணாமலை புகைப்படத்தை தூக்கினார். அதன்பின் பாஜகவினர்.. அமித் ஷா போன்றவர்கள் எடப்பாடிக்கு போன் செய்து எங்களை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டுவிடாதீர்கள். எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்கிறது. அதன்பின் எடப்பாடி மனசு மாறி கூட்டணி பெயரை மாற்றுகிறார்.

வேட்பாளர்
இன்னொரு பக்கம் வேட்பாளர் பெயரை அறிவிக்கிறார். நீங்கள் ஆதரவு கொடுத்தால் கொடுங்கள் இல்லை என்றால் விடுங்கள் என்று எடப்பாடி கூறுகிறார். எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறது. மோடியா லேடியா என்று சொன்ன தைரியம் ஜெயலலிதாவிடம் இருந்தது. அதே தைரியம் தற்போது எடப்பாடியிடம் இருக்கிறது. அதிமுக என்பது பெரிய இயக்கம். ஒரு கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம். அதனால் எடப்பாடி தைரியமாக இருக்கிறார். ஆனால் ஓ பிஎஸ் கமலாலயத்தில் துண்டு போட்டு நின்றும் கூட அவருக்கு ஆதரவு கொடுக்க ஆள் இல்லை. அவர் அரசியல் ரீதியாக பலவீனமான நபர்.

அரசியல் பலம்
அரசியல் ரீதியாக அவருக்கு பலமே இல்லை. அதனால்தான் அவரால் கட்சி நிர்வாகிகளை தனக்கு பின் கொண்டு வர முடியவில்லை. ஓ பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் பலம் இல்லை. அதுதான் தேவை. இப்போது தேமுதிகவுக்கும் கூட சீண்ட ஆள் இல்லை. என்ன காரணம் தொண்டராக்ள் செல்வாக்கு இல்லை. அந்த தொண்டர்கள் செல்வாக்குதான் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இல்லை. சின்னம் போனால் கூட நிற்போம் என்று எடப்பாடி தைரியமாக இருக்க காரணம் அவருக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது. தனக்கு பின் தொண்டர்கள் இருக்கிறாரக்ள் என்பதால் எடப்பாடி தைரியமாக இருக்கிறார், என்று பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications