நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்!
டெல்லி: பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தனது கட்சிப் பொறுப்பைத் துறந்து விலகுவதாக அறிவித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 2-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முக்கிய சந்திப்புகளுக்குப் பிறகு, அமித் ஷா அவரது முடிவுக்கு 'பச்சைக்கொடி' காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அண்ணாமலை தொடர்ந்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளில் அவர் தனது விலகல் முடிவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஐந்து பக்க கடிதத்தில் அண்ணாமலை தனது உண்மைகளை உடைத்து வைத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய தலைமை தனக்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்த அவர், அண்மைக் காலமாக திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
முக்கிய குற்றச்சாட்டுகள்:
2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 11% வாக்கு பங்கு பெற்ற பாஜக, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3% ஆக சரிவடைந்தது. 2021-ல் 4 இடங்களைப் பிடித்த கட்சி, இந்த முறை ஒரே ஒரு இடத்திற்கு குறைந்தது. அதிமுகவுடன் கூட்டணி வைத்ததே இந்த படுதோல்விக்கு முக்கிய காரணம் என அண்ணாமலை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தனித்து நின்று அடிமட்ட அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.
முதலில் அண்ணாமலையை சமாதானப்படுத்தி மாற்றிவிடலாம் என பாஜக தலைமை நினைத்தது. ஆனால், அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் உறுதியாக இருந்ததால், இறுதியில் அவரது முடிவுக்கு மத்திய அமைச்சர் பச்சைக்கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது.
டெல்லி பத்திரிகையாளர்கள் இதை ஒரு தீர்க்கமான அரசியல் கணக்காகப் பார்க்கின்றனர். அண்ணாமலை தனித்த பிராந்திய சக்தியாக உருவெடுத்தால், நீண்டகாலத்தில் திராவிட அரசியலை பலவீனப்படுத்தி, தேசிய சக்திகளுக்கு புதிய பாதையை உருவாக்கும் என அமித் ஷா நம்புவதாக தெரிகிறது. அதாவது அண்ணாமலையை ஒரு டிரம்ப் கார்ட் போல பயன்படுத்தலாம் என்று அமித் ஷா நினைக்கிறாராம்.
விஜய் ஃபேக்டர்:
அண்ணாமலையின் இந்த முடிவு உணர்ச்சிவசப்பட்டதல்ல. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, தமிழக அரசியல் முழுமையாக மாறிவிட்டதை அவர் உணர்ந்ததே இதற்குக் காரணம். 'என் மண் என் மக்கள்' யாத்திரையில் உருவான இளைஞர் அலை, பாஜக மேலிடம் அவரை ஓரங்கட்டியதால் விஜய் பக்கம் திரும்பியதை அண்ணாமலை உணர்ந்தார்.
திராவிட அரசியலைத் தாண்டி புதிய மாற்றை மக்கள் எதிர்பார்ப்பதை உணர்ந்த அவர், தேசிய அடையாளத்துடன் தமிழகத்தில் முழு அங்கீகாரம் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.
அடுத்து என்ன?
அண்ணாமலை உடனடியாக புதிய கட்சியை அறிவிக்கப் போவதில்லை. முதலில் ஊழல் எதிர்ப்பு, இளைஞர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி பிரம்மாண்ட 'மக்கள் இயக்கம்' ஒன்றைத் தொடங்க உள்ளார். அடுத்த 6 முதல் 8 மாதங்களில் இந்த இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் வலுவான அடித்தளத்தை உருவாக்கி, பின்னர் முழு அரசியல் கட்சியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தக் கட்சி 'தமிழ் அடையாளம்' மற்றும் 'சுத்தமான நிர்வாகம்' ஆகியவற்றை மையப்படுத்திய நடுத்தரப் பாதையில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக பாஜகவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அண்ணாமலையின் விலகல் அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் தொய்வை ஏற்படுத்தும் என்பதால், பாஜக மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
அண்ணாமலை, இனி தனித்துப் பாய்ந்து புதிய வரலாறு படைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழக அரசியல் இப்போது புதிய திருப்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications