மட்டன் பிரியாணியுடன் சிக்கன் பிரியாணி கலந்தால் கெமிஸ்ட்ரி இருக்காது.. விஜய் குறித்து அண்ணாமலை பதில்
டெல்லி: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. தவெக தலைவர் விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜக முயற்சி செய்கிறதா என்கிற கேள்விக்கு அண்ணாமலை அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த நிர்வாகிகள், பராசக்தி படக்குழுவைச் சேர்ந்த ரவி மோகன், சிவ கார்த்திகேயன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

அப்போது அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் தற்போது 4 பெரிய கூட்டணிகள் களத்தில் உள்ளன. அதை மறுக்க முடியாது. யாரையும் சிறுமைப்படுத்த கூடாது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சிகள் உள்ளன. தேர்தல் களம் நெருங்க நெருங்க மற்றவர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
பொதுக்கூட்டம்
திமுக வேண்டாம் என்று நினைக்க கூடிய மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். அதற்காக நாங்கள் உழைக்கிறோம். இதேபோல தவெக விஜய், நாம் தமிழர் சீமான் ஆகியோரும் உழைக்கிறார்கள். எங்கள் கூட்டணிக்கு அனுபவமும், பிரதமரின் ஆசீர்வாதமும் இருக்கிறது. வருகிற ஜனவரி 23 ஆம் தேதி பிரதமரின் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னையில் நடக்கிறது. அதன்பிறகு எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும்.
திமுகவை வீழ்த்த வேண்டும்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு உள்ளது. சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என்று சொல்கிறார். அவர் எங்கள் கூட்டணிக்கு வர முடியாது. விஜய் திமுக வேண்டாம் என்கிறார். அப்படியென்றால் யார் வேண்டும் என்பதையும் அவர் சொல்ல வேண்டும். அதிமுக - பாஜகவுக்குள் சித்தாந்த ரீதியாக வேறுபாடு இருந்தாலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற நோக்கத்தில் இணைந்துள்ளோம்.
பலமான கூட்டணி
எங்கள் கூட்டணி பலமாக உள்ளது. மேலும் பலமடையும். நான் எங்கள் தலைமையிடம் எதுவும் சொல்வதில்லை. எனக்கு எங்கள் கூட்டணி பலமாக இருக்க வேண்டும். அதற்காக முரண்பாடு உள்ளவர்களை ஒன்றிணைப்பதும் பிரச்சனை தான். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி கலந்து வெஜ் பிரியாணியுடன் குழப்பினால் கூட்டணியில் கெமிஸ்ட்ரி இருக்காது. யார் எந்த பிரியாணி என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
விஜய் குறித்து அண்ணாமலை
தவெக தலைவர் விஜய்யை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. களத்தில் அவர்கள் ஆக்டிவாக பணியாற்றுகிறார்கள். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரே இல்லாமல், 8.5 சதவீதம் வாக்கு வாங்கியுள்ளனர். தேர்தல் களத்தில் யாரையும் லேசாக எடை போடக் கூடாது. யாரையும் உதாசீனப்படுத்த கூடாது.
4 முனை போட்டி
தற்போது 4 முனை போட்டி நிலவினாலும், தேர்தல் நெருங்கும்போது அது திமுக கூட்டணி, எங்கள் கூட்டணி என இரண்டு முனை போட்டியாக மாறும். முருகன் ஜி எல்லோரையும் அழைத்துள்ளார். இது ஆரோக்கியமான விஷயம். சிவ கார்த்திகேயன் பராசக்தியில் மட்டுமல்ல அமரன் படத்திலும் நடித்துள்ளார். அவர்களை சித்தாந்த ரீதியாக அடைக்க வேண்டும். பாமக எங்கள் கூட்டணியில் உள்ளது. ராமதாஸ் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என நம்புகிறேன்" என்றார்












Click it and Unblock the Notifications