டேபிளை உடைப்போம்.. CMயை பதவி நீக்கும் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! 2 சபையும் ஒத்திவைப்பு
டெல்லி: ஊழல் வழக்கு, கொலை வழக்கில் கைதாகும் பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய மசோதாவை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பதாகை ஏந்தி சபையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அதேபோல் ராஜ்யசபாவிலும் கோஷமிட்டனர். இதனால் இருசபைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மசோதாவை கொண்டு வந்தால் டேபிளை உடைப்போம் என்று எதிர்க்கட்சியினர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

பிரதமர், முதல் அமைச்சர், அமைச்சர்கள் ஊழல் மற்றும் கொலை வழக்கில் கைதாகி தொடர்ந்து 30 நாட்கள் கஸ்டடியில் இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவை இன்று லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜக ஆளாதா மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்களை குறிவைத்து இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருசபைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு மீண்டும் இருசபைகளும் கூடியது. அப்போதும் இருசபைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எம்பிக்கள் கோஷமிட்டனர். இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபா ஆகியவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை காண்பித்து கோஷமிட்டனர். மேலும், ‛‛மத்திய அரசு பாஜக ஆளாத பிற மாநில முதல்வர்களை குறிவைத்து இந்த மசோதாவை கொண்டு வருகிறது. இதன்மூலம் மத்திய விசாரணை அமைப்புகளால் பிற கட்சி முதல்வர், அமைச்சர்களை கைது செய்து பதவியை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது'' என குற்றம்சட்டினார்.
முன்னதாக எதிர்க்கட்சி எம்பி ஒருவர் ‛இந்தியா டூடே' செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது பெரும் போராட்டங்களை நடத்துவோம். அந்த மசோதாவை அறிமுகம் செய்ய விடமாட்டோம். நாங்கள் டேபிளை உடைத்து மசோதா நகலை கிழிப்போம்'' என மிரட்டியிருந்தார். அதன்படியே தற்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் லோக்சபா, ராஜ்யசபாவில் அந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டு சபையை முடக்கி உள்ளனர்.
மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்யும், அதேவேளையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை பெற்றுள்ள இந்த மசோதாவின்படி ஊழல், கொலை உள்ளிட்ட சீரியஸான வழக்குகளில் பிரதமர், முதல் அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் விசாரணை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்தால் 31வது நாள் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்பது தான் சாராம்சமாகும்.
தற்போது பல எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்குகள் உள்ளன. இதனால் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து விசாரணை அல்லது சிறையில் அடைத்து அவர்களின் பதவிகளை பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.












Click it and Unblock the Notifications