வென்றார் கெஜ்ரிவால்.. டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி.. ஆட்சி தப்பியது
டெல்லி: டெல்லி சட்டசபையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.
பாஜகவுக்கும் பிராந்திய கட்சிகளுக்கும் பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணையும் சம்பவங்களும் நடக்கிறது.
சமீபத்தில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா எம்எல்ஏக்கள் தலைமையை மீறி, என்சிபி- காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்து, பாஜக உடன் கூட்டணி அமைத்தனர்.

ஆம் ஆத்மி
அப்படித்தான் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அங்கு ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசை பாஜக தொடர்ந்து சாடியே வருகிறது. அதேபோல பாஜகவை மட்டுமின்றி துணைநிலை ஆளுநர் செயல்பாடுகளையும் ஆம் ஆத்மி விமர்சித்து வருகிறது. சமீபத்தில் டெல்லி ஆளுநருக்கு எதிராகவே ஊழல் புகாரை முன்வைத்து இருந்தது.

மணீஷ் சிசோடியா
இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் சமீபத்தில் மது கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. மது விற்பனை மண்டல வாரியாக பிரிக்கப்பட்டது. இருப்பினும், இதில் டெல்லி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாஜக ஆளுநரிடம் புகார் அளித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.

வென்றார் கெஜ்ரிவால்
இந்தச் சம்பவத்திற்கு பின்னர் தான் இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சம் அடைந்தது. இது ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக எடுத்துள்ள முயற்சி என்று சாடிய கெஜ்ரிவால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதை காட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். அதில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டெல்லி சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.

வெளிநடப்பு
வாக்கெடுப்பிற்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர், இதன் காரமாக ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகிவில்லை. டெல்லியில் மொத்தம் இருக்கும் 62 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 59 பேர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வந்திருந்தனர். மற்ற மூவரில் இருவர் வெளிநாட்டில் உள்ளனர். சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் சிறையில் உள்ளார். சபாநாயகர் தவிர, மொத்தம், 58 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பகீர் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி அரசு பாஜக மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. டெல்லி அரசை கவிழ்ப்பதற்காக பாஜக ரூ.800 கோடி செலவு செய்துள்ளதாக கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டை முன்வைத்தார். இப்படி பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியை கவிழ்க்க அம்மாநில அரசு பல கோடி ரூபாயை செலவளித்து உள்ளதாகவும் கெஜ்ரிவால் சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications