இந்தியாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா.. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?
டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொடிய கொரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாம் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 43,846 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாகப் பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் அலட்சியம் காட்டுவதால் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சுகாதார வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், மாஸ்க்குகளை அணிந்து, தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள் என்றும் சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், கோவாக்சின், கோவிஷீல்டு என்று இரண்டு வகையான தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இவை கொரோனாவை கட்டுப்படுத்தும் இரண்டாவது ஆயுதம் என்றும் அவர் கூறினார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால் நாடு முழுவதும் வைரஸ் தகவல் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இரண்டு அலையைக் கட்டுப்படுத்த துணிச்சலான பெரிய முடிவுகள் சிலவற்றை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இப்போது பரவும் வைரசின் பாதிப்பு தீவிரமாக இல்லை என்றாலும் இவை படுவேகமாக பரவுவதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதேபோல கர்நாடகாவிலும் கரோனா வைரஸ் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாத சில விஷயங்கள்.
பின்பற்ற வேண்டியவை
- தனிமனித சுகாதாரத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும். குறைந்தது 20 நொடிகளுக்குச் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.
- வெளியில் செல்லும்போது, சானிடிசரை எடுத்துச் செல்லுங்கள். அதை அவ்வப்போது பயன்படுத்த வேண்டும்.
- பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க்குகளை அணியுங்கள்.
- இருமல் அல்லது தும்மல் வரும்போது டிஷ்ஷூ அல்லது கர்சீப்பை நாசி அருகே வைக்கவும். அவை இல்லையென்றால் முழங்கையை மூக்கில் வைத்து இரும வேண்டும்.
- பொது இடங்களில் இருக்கும்போது இருமல் அல்லது தும்மும்போது மாஸ்க்கை கழற்ற வேண்டாம்.
- பயன்படுத்தப்பட்ட டிஷ்ஷூகளை முறைாக குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.
- தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகள், கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
- பொது இடங்களில் 6 அடி தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். - உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
செய்யக்கூடாதவை
- முகம், கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்கவும்.
- நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், யாருடனும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டாம்.
- தனிமனித இடைவெளியைப் பின்பற்ற முடியாத மால்கள், ஜிம்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்கு செல்ல வேண்டாம்.
- மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும்.
- பொது இடத்தில் எச்சில் துப்ப வேண்டாம்
இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- அரசு கட்டிடங்களின் நுழைவாயிலில் வெப்ப ஸ்கேனர்களை நிறுவ வேண்டும். அரசு கட்டிடங்களின் நுழைவாயிலில்
- சானிடைசர் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் முறையான சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
- அலுவலகத்தில் ஊழியர்கள் தவிரப் பார்வையாளர்கள் வருவதைக் கட்டுப்படுத்துங்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டாம். முறையான அனுதி பெற்றவர்களை மட்டும் சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.
- ஆலோசனைக் கூட்டங்களை முடிந்தவரை, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தவும். அதிக எண்ணிக்கையிலான நபர்களை உள்ளடக்கிய கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்கலாம்.
- அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்.
- முடிந்தவரை மெயில்கள் மூலம் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள். கோப்புகளையும் ஆவணங்களையும் பிற அலுவலகங்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்.
- எந்தவொரு ரசீதையும் டெலிவரியையும் அலுவலக கட்டிடத்தின் நுழைவாயிலிலேயே கொடுக்கும் வசதி செய்யுங்கள்.
- அரசு கட்டிடங்களில் அமைந்துள்ள அனைத்து ஜிம்கள் / பொழுதுபோக்கு மையங்களை உடனடியாக மூட வேண்டும்.
- வேலை செய்யும் இடங்கள் முறையாக க்ளீன் செய்து, சானிடைசர் மூலம் சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
- கழிப்பிடங்களில் தேவையான சானிடைசர்கள், சோப்புகளை வைக்க வேண்டும்.
- அனைத்து அதிகாரிகளும் தங்கள் உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் .கொரோனா அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
- உயர் அதிகாரிகள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக விடுப்பு கேட்பவர்களுக்கு விடுமுறையை அளிக்க வேண்டும்.
- கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வேலைகள் இவர்களுக்கு அளிக்க வேண்டாம்












Click it and Unblock the Notifications