அன்று வாஜ்பாயின் தனி செயலாளர்.. இன்று ரயில்வே & ஐடி துறை அமைச்சர்.. யார் இந்த அஸ்வினி வைஷ்ணவ்
டெல்லி: இன்று புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு தனிச் செயலராக இருந்த அஸ்வினி வைஷ்ணவிற்கு ரயில்வே துறை & ஐடி துறை என இரு முக்கிய துறைகளின் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2019ஆம் ஆண்டு முதல் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அப்போது மொத்தம் 53 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், இன்று மோடி தலைமையிலான அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்தனர்.

அஸ்வினி வைஷ்ணவ்
இந்நிலையில், மாலை புதிதாக 43 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர். அப்படி புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர் அஸ்வினி வைஷ்ணவ். 51 வயதாகும் இவர், ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். எம்பிஏ பட்டதாரியான அஸ்வினி வைஷ்ணவ், 1994ஆம் ஆண்டு ஒடிசா பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரி ஆவர்.

ஒடிசா புயல்
கடந்த 1999ஆம் ஆண்டு ஒடிசாவில் மோசமான புயல் ஒன்று ஏற்பட்டது. அப்போது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுத்ததில் அஸ்வினி வைஷ்ணவ் பங்கு முக்கியமானது. புயல் குறித்து அமெரிக்காவின் நேவி இணையதளத்தில் இருந்து தகவல்களை சேகரித்து, இவர் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பியதாகவும் இவர் அனுப்பிய தகவல்கள் மிகவும் உபயோகமாக இருந்ததாகவும் அவருடன் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

வாஜ்பாயின் தனி செயலாளர்
இவர் கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் அலுவலகத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2003 ஆம் ஆண்டு வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் தனி செயலாளராகவும் இருந்தார். அதைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில், மர்முகோவா துறைமுக டிரஸ்டின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் குடிமைப் பணியில் இருந்து விலகி எம்பிஏ படிக்க அமெரிக்கா சென்றார்.

மத்திய அமைச்சர் பதவி
அதன் பிறகு இந்தியா திரும்பிப் பல நிறுவனங்களில் பணியாற்றினார், கடந்த 2019ஆம் ஆண்டு ஒடிசாவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவருக்கு ரயில்வே & ஐடி துறை என இரண்டு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறை
உலகிலேயே மிக அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் இந்தியன் ரயில்வே. கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2020 மார்ச் முதல் வழக்கமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மேலும், ரயில்வே துறைக்கு ஏற்படும் நஷ்டம், தனியார்மயமாக்குதல் எனப் பல சிக்கல்களையும் கொண்டுள்ளது, அதையெல்லாம் சீர் செய்யும் பொறுப்பு அஸ்வினி வைஷ்ணவ்க்குதான் தற்போது உள்ளது.

ஐடி துறை
அதேபோல புதிய ஐடி விதிகள் காரணமாக டெக் நிறுவனங்கள், குறிப்பாக ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசுக்கு ஐடி துறையை நிர்வகிக்க வலுவான ஒரு நபர் தேவைப்பட்டார். ஏற்கனவே பல காப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அஸ்வினி வைஷ்ணவ் இதையும் சிறப்பாக கையால்வார் என நம்பியே இந்தத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications