தேசிய பால் தினம்: வர்கீஸ் குரியனுக்கு ஆவின் மரியாதை.. யார் இந்த குரியன்..?
டெல்லி: மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் தேசிய பால் வாரியம் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 26ஆம் தேதி தேசிய பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட வர்கீஸ் குரியனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது பிறந்த நாள் தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக குரியனின் நூற்றாண்டு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பால் உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோது அதிக அளவில் பால் பவுடர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டது. பால் வாங்குவதற்கே ரேஷன் முறை இருந்த நிலையை மாற்றி வெண்மை புரட்சிக்கு வித்திட்டு அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவர் குரியன்..

தேசிய பால்வள வாரியம் அமைக்க அடித்தளம் இட்டு அதன் நிறுவனத் தலைவராக பொறுப்பு வகித்து பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். நாடு முழுவதும் லட்சக்கணக்கான கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களை உருவாக்கினார். அவரது திட்டங்களால் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தைப் பெற்றது. குஜராத் தவிர தென்னிந்தியாவில் வேறு எங்கும் சிலைகள் இல்லாத நிலையில் ஈரோடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தவர் குரியன். இவரது தந்தை ஈரோடு மாவட்டம் கோபியை மருத்துவராகப் பணியாற்றிய போது கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் ஒரு ஆண்டு படித்தார் . தொடர்ந்து குரியன் சென்னை லயோலாக் கல்லூரியில் 1940ஆம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார்.
1946ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.
இந்தியா வந்தபிறகு, மே 1949ஆம் ஆண்டு ஆனந்த் அரசு பால்பண்ணையில் பொறியாளராகச் சேர்ந்தார். அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே இந்தியாவில் புகழ்பெற்ற அமுல் பால் மற்றும் பால்பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் பிறக்க வழி வகுத்தது.
வெண்மைபுரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் நூற்றாண்டு பிறந்தநாளான இன்று அவரை பெருமைப் படுத்தும் விதமாக ஆவின் பால் நிறுவனம், தாங்கள் விற்பனை செய்யும் பால் பாக்கெட்டுகளில் டாக்டர் வர்கீஸ் குரியனின் புகைப்படத்துடன், சேவையே வாழ்க்கை என்ற வரிகளுடன் வெளியிட்டு பெருமைபடுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications