நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்! குவைத் இளவரசருக்கு பிரதமர் மோடி சர்ப்ரைஸ்
டெல்லி: தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குவைத்தின் பட்டத்து இளவரசருக்கும் குவைத் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் கொண்டாடப்பட்டு வருகிறது.

இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதை இந்த திருநாள் வலியுறுத்துகிறது. அதற்காகத்தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரீத் வலியுறுத்துகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று அதிகாலையில் டெல்லியில் உள்ள ஜமா மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். டெல்லி மட்டுமல்லாது மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை முடிந்த பின்னர் ஒருவரையொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல குவைத் நாட்டின் பட்டத்து இளவரசருக்கும், குவைத் மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதாக இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது.
பக்ரீத் பண்டிகையையொட்டி டெல்லியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். பண்டிகையன்று எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக டெல்லியின் சிறப்பு கமிஷ்னர் தீபேந்தர் பதக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications