வரலாற்றில் முதல்முறை.. உச்சநீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை! நீதிபதி பிரம்மாஸ்திரத்தால் வீழ்ந்த பாஜக
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதை உறுதியான நிலையில் இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்றத்திலேயே வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டு இருக்கின்றன.
சண்டிகர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பாஜகவுக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பாஜக சார்பில் மனோஜ் சோங்கர், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் குல்தீப் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கூட்டணி 20 வாக்குகள் பெற்றது. பாஜக 16 வாக்குகள் பெற்றது

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அப்படி என்றால் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றிபெற்றதாக தெரிந்த நிலையில் மிகப்பெரிய டுவிஸ்டை வைத்தார் தேர்தலை நடத்திய அதிகாரி அனில் பாசி. ஆம் ஆத்மி, இந்தியா கூட்டணிக்கு விழுந்த 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என அவர் அறிவித்தார். வாக்குச்சீட்டில் பேனாவால் அடித்து திருத்தி பாஜகவை சேர்ந்த வேட்பாளர் மனோஜ் சோங்கரை வெற்றி பெற்றவர் என மேயராக தேர்தல் அதிகாரி அறிவித்தார். தேர்தல் அதிகாரியின் இச்செயல் ஆத் ஆத்மி - காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா புலகாங்கிதம் அடைந்து சண்டிகர் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை பாராட்டி ட்வீட் செய்தார். மறுபக்கம் ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் குதித்தனர். ஆம் ஆத்மி சட்டப்போராட்டத்திலும் இறங்கியது. ஆம் ஆத்மியின் சட்டப்போராட்டத்துக்கு பேருதவியாக இருந்தது ஒரு சிசிடிவி வீடியோ. அந்த காட்சியில் வாக்குச் சீட்டுகளை கொண்டு தேர்தல் அதிகாரி அனில் வாக்குகளை பேனாவை கொண்டு அழித்தது தெளிவாக பதிவாகி இருந்தது.
சண்டிகர் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையை முந்தைய அமர்விலேயே தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக கண்டித்தார். ஜனநாயகத்துக்கே இது ஆபத்தானது என அவர் விமர்சித்து இருந்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை தேர்தல் அதிகாரியிடம் எழுப்பினார். ஆனால், அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் அனில்.
ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதை உறுதிபடுத்தியது. இதனை அடுத்து அரிதினும் அரிதாக பயன்படுத்தப்படும் 142 வது சட்டப்பிரிவின் மூலம் மேயர் தேர்தலை செல்லாது என அறிவித்தது உச்சநீதிமன்றம். அத்துடன் வாக்குச்சீட்டுகள் உச்சநீதிமன்றத்திலேயே எண்ணப்பட்டு ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் வெற்றிபெற்று மேயர் என்று அறிவிக்கப்பட்டார். இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு இருப்பது வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications