இந்திய மாப்பிள்ளை தான் வேணும்.. ஒற்றை காலில் நிற்கும் வங்கதேச பெண்கள்! 2024ல் எகிறிய திருமணம் - ஏன்?
டெல்லி: நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் இந்திய மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என்று வங்கதேச பெண்கள் ஒற்றை காலில் நிற்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது 2024ம் ஆண்டில் இந்திய ஆண்களை திருமணம் செய்த வங்கதேச பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. வங்கதேச பெண்கள் ஏன் இந்திய மாப்பிள்ளை வேண்டும் என்று அடம்பிடிக்கின்றனர்? வாங்க பார்க்கலாம்.
வங்கதேசம்.. நமது அண்டை நாடு. இன்னும் சொல்லப்போனால் முன்காலத்தில் நம்முடன் ஒன்றாக இருந்த நாடு. நம் நாட்டின் சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தான் தனிநாடாக ஆனது. அப்போது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் பாகிஸ்தானின் ஒருபகுதியாக வங்கதேசம் மாறியது.

அதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து 1971ல் வங்கதேசம் தனிநாடாக உருவானது. வங்கதேசம் தனி நாடாக உருவாக நம் நாட்டு ராணுவ வீரர்கள் தான் பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் புரிந்தனர். அதில் கிடைத்த வெற்றியின் பரிசாக தான் வங்கதேசம் உருவானது. இப்படி நம் நாட்டுடன் நெருங்கிய பந்தம் கொண்டுள்ளது வங்கதேசம்.
ஆனால் இன்று வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான உறவு என்பது விரிசல் அடைந்துள்ளது. இதற்கு அந்த நாட்டில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டமும், அதன் விளைவாக பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ப்பும் தான் காரணம். ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்த நிலையில் அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த அரசு நம்முடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதனால் நமக்கும், வங்கதேசத்துக்கும் இடையே இப்போது சுமூகமான உறவு என்பது இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியர்களை கரம்பிடிக்க விருப்பம்
இருப்பினும் கூட தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள், இந்தியர்களை தான் திருமணம் செய்வோம் என்று ஒற்றை காலில் நிற்கின்றனர். இதனை கேட்கும்போது தான் ‛‛காதலுக்கு எல்லைகள் கிடையாது. அரசியல் கிடையாது. இருமனங்கள் இடமாறி ‛உனக்கு நான்.. எனக்கு நீ' '' என்ற காதல் மொழிகள் உண்மை தான் என்று நம்மை நம்மை எண்ண செய்கிறது.
2024ல் மட்டும் 100 பெண்கள்
ஆம், இதை உணர்த்தும் வகையில் தான் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் 20ம் தேதி வரை மொத்தம் 100 வங்கதேச பெண்கள் இந்திய மாப்பிள்ளையை திருமணம் செய்ய மேற்கு வங்க மாநிலத்தில் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் 79 பேர் இந்துக்கள். 9 பேர் கிறிஸ்தவர்கள். 16 பேர் இஸ்லாமியர்கள். இது கடந்த 2023ம் ஆண்டை ஒப்பிடும்போது இருமடங்காகும். கடந்த 2023ம் ஆண்டில் 44 பெண்கள் (39 இந்துகள், ஒரு கிறிஸ்தவர், 3 இஸ்லாமியர், இன்னொரு மதத்தை சேர்ந்த ஒருவர்) இந்திய மாப்பிள்ளையை திருமணம் செய்ய அனுமதிகோரி விண்ணப்பம் செய்திருந்த நிலையில் இப்போது கிடுகிடுவென அதிகரித்துள்ளது.
5 ஆண்டில் அதிகம்
கடந்த 2019ம் ஆண்டு முதல் மொத்தம் 486 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 23 சதவீதம் என்பது 2024ல் வந்த விண்ணப்பங்களாகும். அதோடு கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு 2024ல் அதிக பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
காரணம் என்ன?
இதுதொடர்பாக மேற்கு வங்க மாநில திருமண ரிஜிஸ்டர் ஜெனரல் அலுவலகத்தை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛வங்கதேச பெண்கள் இந்திய ஆண்களை திருமணம் செய்ய விரும்புவதன் பின்னணியில் 2 முக்கிய காரணம் உள்ளன. இதில் ஒன்று வங்கதேசத்தை சேர்ந்த பெண்கள் இந்திய குடியுரிமையை விரும்புகின்றனர். இதனால் இந்திய மாப்பிள்ளையை தேர்வு செய்கின்றனர்.
2வது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளிநாட்டினரை திருமணம் செய்து கொள்ள ஏதுவாக மேற்கு வங்கத்தில் விதிமுறை கொண்டு வரப்பட்டது. அந்த விதியின்படி உரிய விசாவுடன் மேற்கு வங்கத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை பிரமாண பத்திரமாக வழங்கி இந்தியர்களை திருமணம் செய்யலாம் என்று தெரிவிக்கிறது'' என்றார்.
குடியுரிமை பெறுவது கிடைக்கும்?
இதன்மூலம் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் தங்களின் மகள்களை இந்திய மாப்பிள்ளைக்கு மணம் முடித்து கொடுத்து அவர்களுக்கு நம் நாட்டின் குடியுரிமையை பெற விரும்புகின்றனர். நம் நாட்டை பொறுத்தவரை வெளிநாட்டை சேர்ந்த ஒருவருக்கு நம் நாட்டின் குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டம் 1955 வழிவகுத்து கொடுக்கிறது. அதன்படி வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் நம் நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து 7 ஆண்டுகள் வசித்தால் இந்திய குடியுரிமை என்பது வழங்கப்படும். மாறாக அந்த தம்பதிக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புரிமை அடிப்படையில் உடனடியாக இந்திய குடியுரிமை என்பது வழங்கப்படும்.
வங்கதேச ஆண்- இந்திய பெண்கள்
இப்படி இந்திய ஆண்களை திருமணம் செய்ய வங்கதேச பெண்கள் ஆர்வம் காட்டும் அதே வேளையில் வங்கதேச ஆண்கள் - இந்திய பெண்கள் இடையேயான திருமணத்தை பார்த்தால் மிகமிக குறைவாக தான் உள்ளது. 2024ல் 11 வங்கதேச ஆண்கள் (இந்து 9 பேர், இஸ்லாமிர் 2 பேர்), இந்திய பெண்களை திருமணம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த 2023ல் 13 வங்கதேச ஆண்கள் (இந்து 8 பேர், இஸ்லாமியர் 4 பேர், மற்ற மதத்தை சேர்ந்த ஒருவர்) விண்ணப்பம் செய்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications