முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! குடியரசுத் தலைவர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு!
டெல்லி: 77வது குடியரசு தின விழாவில் பங்கேற்றிருந்த முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்வு டெல்லி விஜய் சவுக்கில் நடைபெற்றது. இதனை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்திருக்கின்றனர்.
77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியின் விஜய் சவுக்கில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் இதில் பங்கேற்பர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சோஷியல் மீடியா பதிவில், “இவ்விழா இந்தியாவின் செழுமையான இராணுவப் பாரம்பரிய வலிமையை வெளிப்படுத்தும்” எனக் குறிப்பிட்டார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் ஆயுதப் படைகள் குறித்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்குப் புனிதமான, கண்ணியமான முடிவைத் தரும் பாரம்பரியம் என்றார். விஜய் சவுக்கின் கம்பீரமான பின்னணியில், இது தேசியப் பெருமை மற்றும் இராணுவப் பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழும் எனவும் கூறியிருக்கிறார்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகளின் இசைக்குழுக்களின் 30 நிகழ்ச்சிகள் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை உற்சாக இசையால் கவர்ந்தது. இந்நிகழ்ச்சி, புகழ்பெற்ற 'சரே ஜஹான் சே அச்சா' பாடல் பக்ளர்களால் இசைக்கப்பட்டு இனிதே நிறைவடைந்தது.
பாசறை திரும்பும் விழா என்றால் என்ன?
வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு என்பது, நூற்றாண்டு கால ராணுவ பழமையான ஒரு பாரம்பரியமாகும். போர்க்களத்தில் சூரிய அஸ்தமனத்தின் போது, வீரர்கள் போரை நிறுத்தி விட்டு தங்கள் பாசறைக்கு திரும்புவதை இது குறிக்கிறது. இந்தியாவில் கடந்த 1950களின் தொடக்கத்தில் மேஜர் ராபர்ட்ஸ் என்பவரால் இந்த விழா முறைப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு, விழாவில் இசைக்கப்படும் அனைத்து பாடல்களும்.. இந்திய இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டவை. இது 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் நாட்டின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

வந்தே மாதரம் பாடல் உருவான 150வது ஆண்டை கொண்டாடும் வகையில், நிகழ்வில் அதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் சித்தார், மிருதங்கம் மற்றும் தபேலா கொண்ட பாரம்பரிய இசைக்கருவிகளின் நாதம் ராணுவ இசை குழுவினரால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் தனித்தனியாகவும், இணைந்தும் பல்வேறு தேச பக்தி பாடல்களை இசைத்தனர். வழக்கம்போல விழாவின் உச்சகட்டமாக, 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் இசைக்கப்பட்டு, தேசிய கொடி இறக்கப்பட்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன.












Click it and Unblock the Notifications