தலைய வெட்டுங்க.. துப்பாக்கில சுடுங்க! டெல்லி கமிஷ்னரே டீ தருவார்.. விஷ்வ இந்து பரிஷத் ஓபன் டாக்
டெல்லி: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் டெல்லியில் ஜன் ஆக்ரோஷ் என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவர்கள் மதவெறி கருத்துக்களை தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் கடந்த ஆண்டு மணிஷ் என்ற இளைஞரின் செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் அவரளித்த புகாரை வாபஸ் பெறுமாறு திருடர்கள் மிரட்டி இருக்கின்றனர்.
ஆனால், தன்னுடைய புகாரை மணிஷ் வாபஸ் பெற மறுத்ததால் கொடூரமாக தாக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். இதில் இஸ்லாமியர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக இந்து அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

போலீஸ் விளக்கம்
ஆனால், இந்த கொலை தொடர்பாக விசாரித்த டெல்லி போலீசார் இதற்கு மதம் காரணமில்லை என்று தெரிவித்துள்ளனர். மணிஷை கொன்றவர்கள் திருடர்களின் நண்பர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இதனை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் டெல்லியில் கண்டன கூட்டம் நடத்தினர்.

தலையை வெட்டுங்கள்
இதில் பேசிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேச்சாளர் ஜகத் குரு யோகேஷ்வர் ஆச்சாரியா, "நம்மை தாக்கியவர்களின் தலைகளையும் கைகளையும் துண்டித்துவிடுங்கள். யார் என்று கண்டுபிடித்து தண்டியுங்கள். அந்த சக்திகளை தண்டிப்பதற்கான நேரம் வந்துவிட்டது அதிகபட்சம் உங்களை சிறையில் அடைப்பார்கள் அவ்வளவுதான்." என்றார்.

துப்பாக்கியால் சுடுங்கள்
மற்றொரு பேச்சாளரான மஹாந்த் நவால் கிஷோர் தாஸ், "துப்பாக்கிகளை வாங்குங்கள். அதற்கான உரிமத்தை பெறுங்கள். உரிமம் இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம். உங்களை கொல்ல வருபவர்களிடன் உரிமம் இருக்கிறதா என்ன? அப்படி இருக்கையில் உங்களுக்கு எதற்கு உரிமம். நாம் அனைவரும் ஒன்றிணைத்தால் டெல்லி காவல் ஆணையர் கூட தேனீர் கொடுத்து நாம் நினைப்பதை செய்ய அனுமதிப்பார்." என்றார்.

ஜிஹாத் சக்திகள்
இதுகுறித்து விஷ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவிக்கையில், "நாங்கள் நடத்தியது ஜன் ஆக்ரோஷ் கூட்டம். அவர்கள் பேசியது ஜிஹாத் சக்திகளுக்கு எதிரானது. வேறு எந்த சமுதாயத்துக்கும் எதிரானது அல்ல. மக்கள் கோபமாக உள்ளனர். மக்கள் விரும்பினால் ஜிஹாத் சக்திகளுக்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ளட்டும் என்பதே அவர்கள் பேசியதன் அர்த்தம்." என்றார்.












Click it and Unblock the Notifications