பாதுகாப்பு குளறுபடி: விதிகளை மீறி ஓடும் ராகுல்.. மத்திய உள்துறையிடம் மாட்டிவிட்ட டெல்லி போலீஸ்!ஏன்?
டெல்லி: டெல்லியில் கடந்த 24ம் தேதி காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்தது. இந்த வேளையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் புகார் செய்தது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி பாதுகாப்பில் குறைபாடு இல்லை. ராகுல் காந்தி தான் விதிகளை மீறுகிறார் என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி போலீஸ் போட்டு கொடுத்துள்ளது. இதனால் ராகுல் காந்தியின் பாதுகாப்பு தொடர்பான அம்சம் அடுத்தக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி சரிவை சந்தித்து வருகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு போன காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் வெற்றி ஊக்கம் கொடுக்கும் வகையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரை செல்ல முடிவு செய்தார்.

150 நாள் யாத்திரை
இதன்மூலம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை துவக்கினார். இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

டெல்லியில் யாத்திரை
தற்போது 100 நாட்களை கடந்த இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானாவை கடந்து 108 வது நாளில் கடந்த 24ம் தேதி தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தது. இந்நிலையில் தான் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியஉள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பில் குளறுபடி
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் எழுதிய கடிதத்தில், ‛‛பாரத் ஜோடோ யாத்திரையின்போது டெல்லியில் ராகுல் காந்தியை சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்க பாதுகாப்புக்கான டெல்லி போலீசார், சிஆர்பிஎப் வீரர்கள் தவறிவிட்டனர். இசட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள ராகுல் காந்தி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரையில் இணையும் அனைவரின் பாதுகாப்பையும் தலைவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் செல்லும்போது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

டெல்லி போலீஸ் மறுப்பு
இதனை டெல்லி போலீசார் மறுத்து இருந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிக்கை டெல்லி போலீசார் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசாரின் அனைத்து பிரிவுகளான பாதுகாப்பு, போக்கவரத்து மற்றும் டெல்லி சிறப்பு பிரிவு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
அந்த அறிக்கையில் ராகுல் காந்தி மீது சரமாரியாக குற்றம்சுமர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராகுல் காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தபோதிலும் கூட அவர் விதிகளை மீறுகிறார். டெல்லியில் யாத்திரை நடந்தபோது பல போலீசார் சாதாரண உடைகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டள்ளது. இருப்பினும் ராகல் காந்தி பாதுகாப்பு வளையத்தை உடைத்தார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிஆர்பிஎப் பதிலடி
முன்னதாக நேற்று ராகுல் காந்தியின் பாதுகாப்பில் உள்ள குறைபாடு தொடர்பான புகாருக்கு மத்திய ரிசர்வ் போலீசார் மறுப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து இருந்தனர். அப்போது 2020ல் ராகுல் காந்தி 113 முறை பாதுகாப்பு விதிகளை மீறியுள்ளார். ராகுல்காந்தி பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது இல்லை. பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அவரே விதிகளை மீறி செயல்ப்டுகிறார். இது உண்மையானது. இதற்கு முன்பும் இது பலமுறை நடந்துள்ளது. இதுதொடர்பாக ராகுல் காந்தியிடமும் கூறப்பட்டள்ளது என குற்றம் சுமத்திய நிலையில் தற்போது டெல்லி போலீசாரும் உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications