பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவர் பிபேக் டெப்ராய் காலமானார்!
டெல்லி: பிரபல பொருளாதார நிபுணரும், பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவருமான பிபேக் டெப்ராய் இன்று காலமானார். அவருக்கு வயது 69. டெப்ராய் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய். 69வது வயதான இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியப் பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ள டெப்ராய், இந்தியப் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பிரதமர் இரங்கல்: டெப்ராய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "பிபேக் டெப்ராய் ஒரு சிறந்த அறிஞர்.. பொருளாதாரம், வரலாறு, கலாச்சாரம், அரசியல், ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர். இந்தியாவின் அறிவுசார் துறையில் தனி முத்திரை பதித்தவர். பொருளாதாரத்தைத் தாண்டி பழங்கால நூல்கள் குறித்து ஆய்வு செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
பத்மஸ்ரீ விருதைப் பெற்ற டெப்ராய், புனேவின் கோகலே அரசியல் மற்றும் பொருளாதாரக் கழகத்தின் தலைவராக இருந்தவர். மேலும், கடந்த 2019 ஜூன் வரை நிதி ஆயோக் உறுப்பினராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிபுணத்துவம்: மேக்ரோ பொருளாதாரம் (macroeconomics) மற்றும் பொது நிதியில் டெப்ராய் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். மேலும், பொருளாதார சீர்திருத்தம், நிர்வாகம் மற்றும் ரயில்வே சார்ந்து பல ஆய்வுகளைச் செய்துள்ளார். இது தவிர அவர் மகாபாரதம் மற்றும் பகவத்கீதை உட்படச் சமஸ்கிருத நூல்களையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
எங்கு பணியாற்றினார்: அவர் 1979 முதல் 1984 வரை கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் அவர் புனேவில் உள்ள கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் 1987 வரை பணியாற்றினார். அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் 1993 வரை பணியாற்றினார்.
தொடர்ந்து 1993ஆம் ஆண்டில் அவர் நிதி அமைச்சகம் மற்றும் ஐநா மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) திட்டத்தின் இயக்குநரானார். 1998 வரை அவர் அந்த பதவியில் இருந்தார். அதன் பிறகு அவர் 2006 ஆம் ஆண்டு வரை பிஎச்டி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியில் பணியாற்றினார். பின்னர் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் 2007 முதல் 2015 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications