வசமாக சிக்கும் பிரிஜ் பூஷன் சிங்.. பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக சாக்ஷி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரும் போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இதையடுத்து, டெல்லி போலீசார் பிரஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

ஆதாரங்கள் உள்ளது: இந்த நிலையில், பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய டெல்லி கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:- "மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் அளவுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது.
எனவே, பிரிஜ் பூஷன் சிங் மீது ஐபிசி பிரிவுகள் 354, 354-ஏ, 506 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். 6-வது நபரின் புகாரில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விடுவிக்கப்படுவார். மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமர் மீது பிரிவு 506-ன் கீழ் சார்ஜ் ஷீட் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.
பிரிஜ் பூஷன் மீதான வழக்கு என்ன?: பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், 2016 - 2019 வரையிலான காலத்தில் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
எனினும், பிரிஜ் பூஷன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டம் வலுவடைந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்டோர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வழக்கு பதிவு: இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீராங்கனைகள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், நாடு முழுவதும் கண்டனம் வலுத்ததை அடுத்து போலீசார் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
தேர்தலில் வாய்ப்பு: இந்நிலையில், ஆறு முறை எம்.பியான பிரிஜ் பூஷன் சிங்கிற்கு பாஜக மீண்டும் சீட் வழங்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு பதிலாக அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளது பாஜக தலைமை. பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார்கள் நாட்டையே அதிர வைத்த சூழலிலும் அவரது மகனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளது பாஜக.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் சிக்கிய பாஜக எம்.பி பிரிஜ் பூஷனின் மகன் கரண் பூஷன் சிங்குக்கு பாஜக இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications