கங்கணம் கட்டி இறங்கிய நிதீஷ் குமார்.. “2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கனும்”- கெஜ்ரிவாலுடன் மீட்டிங்
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் இன்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசி உள்ளார்.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிகாலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளில் இப்போதே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இறங்கி இருக்கின்றன. மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி அமைவதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை இணைத்து ஒரே அணியாக தேர்தலை சந்திக்க வைக்க கடந்த ஓராண்டாகவே முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினும் வலியுறுத்தி வருகிறார்.
இதேபோல் மற்ற மாநிலக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளும் முயற்சி செய்து வருகிறார்கள். குறிப்பாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு இந்த முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல்வேறு மாநிலங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.

குறிப்பாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.
அதேபோல் சிவசேனா (உத்தவ் பாலாசாஹேப்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரையும் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் சந்தித்து பேசி உள்ளார்.
அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலைவர் பத்ருதீன் அஜ்மலையும் நிதீஷ் குமார் சந்தித்து பேசி உள்ளார். இந்த நிலையில் இன்று மீண்டும் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசி உள்ளார் நிதீஷ் குமார். டெல்லிக்கு பீகார் துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவுடன் சென்ற நிதீஷ் குமார் அர்விந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க ஒரே கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக இருவரும் பேசியதாக கூறப்படுகிறது. நிதீஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தும் தலைவர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் உள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜூன் 20 ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி கோட்டத்தை நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் பாட்னாவில் விரைவில் எதிர்க்கட்சிகள் மாநாட்டுக்கும் திட்டமிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications