பீகாரில் நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்கள் விவரங்களை தாக்கல் செய்யுங்க.. உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பீகாரில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பீகாரில் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் பேரின் விவரங்களை அக்டோபர் 9 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சிகளாக ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர்.

பீகாரில் 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6ம் தேதி முதற்கட்டமாகவும், நவம்பர் 11ம் தேதி 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
முன்னதாக பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு நடந்து கொண்டு இருந்தபோதே சிறப்பு வாக்காளர் திருத்தம் நடந்து முடிந்தது.
முன்னதாக சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு முன்பு அதாவது ஜூன் 24ம் தேதி பீகாரின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.89 கோடியாக இருந்தது. அதன்பிறகு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு பிறகு ஆகஸ்ட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.24 கோடி என தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தன. இதுவும் சர்ச்சையை கிளப்பியது.
அதன்பிறகு 2வது முறையாக 3.66 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. இதுவும் பேசும் பொருளானது. இருப்பினும் கூட செப்டம்பர் 30ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.42 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது புதிதாக 21.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தான் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்க்கும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றுமு் நீதிபதி ஜாய்மாள்யா பக்சி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக 2வது முறையாக நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் பெயர் விவரங்களை அக்டோபர் 9 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications