“பெண்களுக்கு சமநீதி கிடைக்கும்”.. உச்சநீதிமன்ற தீர்ப்பு.. நம்பிக்கை தெரிவித்த பில்கிஸ் பானு
டெல்லி: தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி தனது குடும்பத்தினரை படுகொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், இந்த விடுதலையை நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இந்த உத்தரவுக்கு பில்கிஸ் பானு நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பு குஜராத் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதாவது, 1992ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கையின் இதனை குற்றவாளிகள் அனைவரும் சிறையில் கழித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தண்டனை குறைப்பு கோரினார்கள். சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைகள், மாவட்ட சட்ட வல்லுநர்கள் அறிவுரைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்திருந்தது. இருப்பினும் இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், "இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று கூறினர்.
மேலும், "பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து ஏற்கெனவே பில்கிஸ் பானு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. எனவே பொதுநல மனுக்களாக சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு பில்கிஸ் பானு நன்றி தெரிவித்துள்ளார். "எனக்கும், எனது குழந்தைகளுக்கும், எல்லா பெண்களுக்கும் எல்லா இடங்களிலும் நியாயம், சமநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு வழங்கியதாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது நெஞ்சில் இருந்த மிகப்பெரிய பாரத்தை இந்த தீர்ப்பு அகற்றியுள்ளது. இப்போதுதான் நான் நிம்மதியாக சுவாசிக்கிறேன்.
இந்த பயணத்தை நான் தனியாக மேற்கொள்ளவில்லை. என்னுடன் எனது கணவர், தோழர்கள் இருக்கின்றனர். அவர்கள் கொடுத்த அன்பு என்னை வெறுப்பு பாதையிலிருந்து மீட்டது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications