'நான் என்றும் காஷ்மீருக்கு துணை நிற்பேன்.. எனக்குள்ளும் ஒரு காஷ்மீரி இருக்கிறார்..' ராகுல் காந்தி
டெல்லி: மாநில அந்தஸ்து பெறுவதற்குக் காஷ்மீருக்குத் துணை நிற்பேன் எனத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீரி என்ற சிந்தனை தனக்குள்ளும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி, 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ராகுல் காந்தி காஷ்மீருக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
அங்குள்ள கீர் பவானி மற்றும் ஹஸ்ரத்பால் கோயில்களுக்குச் சென்று சிறப்பு வழிபாட்டை மேற்கொண்ட அவர், ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

காஷ்மீரி
அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, "எங்கள் குடும்பத்தில் முன்னோர்கள் காஷ்மீரில் வசித்தவர்கள் தான். காஷ்மீரியத்தை நானும் நம்புகிறேன்; என்னுடைய உடலிலும் அந்த ரத்தம் தான் ஓடுகிறது. அன்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் மூலம் காஷ்மீர் விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் முயன்றோம். நாங்கள் இங்குச் செய்திருந்த முன்னேற்றங்களையும் எல்லாம் பாஜக நாசப்படுத்திவிட்டது. இதனால் இங்குள்ள மக்கள் காயப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம்

துணை நிற்பேன்
அன்பு மற்றும் புரிதலால் ஏற்படும் உறவு தான் எங்களுக்குத் தேவை. நான் உங்களுக்குத் துணையாக நிற்பேன். நீங்கள் மாநில அந்தஸ்தைப் பெற நான் போராடுவேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்த போது, என்னை அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இப்போது நான் ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறேன்.இது வெறும் தொடக்கம் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நாடாளுமன்றம்
பெகாசஸ், வேலையின்மை, காஷ்மீர் விவகாரம், ஊழல் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் பேச விரும்புகிறோம். ஆனால், அவர்கள் எங்களைப் பேச அனுமதிப்பதில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் பங்கேற்றார். காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து நீக்கப்பட்ட போது 16,500 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் முன்னாள் முதல்வர்களைக் கூட அவர்கள் விடவில்லை என்றும் குலாம் நபி ஆசாத் குற்றஞ்சாட்டினார்,

காங் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்
தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத், "மாநிலக் கோரிக்கை நிறைவேறிய பின்னரே தேர்தலை நடத்த முடியும். காஷ்மீர் தலைவர்கள் பிரதமர் சந்தித்த போதே இதைத்தான் தெரிவித்தோம். உத்தரகண்ட் மற்றும் இமாசல பிரதேசம் காஷ்மீரை விட சிறியவை. ஆனால் அவர்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நில உரிமைகளை எங்களுக்கு வழங்கியவர் மகாராஜா ஹரி சிங். இப்போது காஷ்மீரில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது, தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிய இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. இப்போதுகூட ஒன்றும் இல்லை காஷ்மீரை மீண்டும் ஒரு மாநிலமாக்கி ஒரு மசோதாவை அவர்களால் நிறைவேற்ற முடியும். அதற்கு ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது" என்றார்.












Click it and Unblock the Notifications