என்னது பாஜக உத்தேச பட்டியலா.. யூடர்ன் அடித்த நயினார் நாகேந்திரன்.. டெல்லியில் என்ன ஆச்சு
டெல்லி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, நிர்மலா சீதாராமன், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்திய நயினார், சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை வழங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உத்தேச பட்டியல் என்பதே தவறான தகவல் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபர வியூகங்கள், பிரச்சாரத்துடன் வலம் வர தொடங்கியுள்ளனர். பரபரப்பான சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் ஏற்கனவே அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்திருந்தார்.

செயல் தலைவருடன் சந்திப்பு
பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் நிதின் நிபனை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "பாஜக கட்சி தங்களின் புதிய அகில இந்திய தலைவராக இளம் வயதான துடிப்பான ஒருவரை தேர்வு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஒரு சரித்தர சாதனையை செய்துள்ளனர். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. பாஜக உலகத்தின் மிகப்பெரிய கட்சி. இதற்கு முன்பு பாஜக தலைவராக இருந்த நட்டா சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு மாநிலங்களில் வெற்றியை பெற்று கொடுத்தார். நட்டா மற்றும் நிதின் இருவருக்கும் என் பாராட்டுகளை கூறி கொள்கிறேன்.
உத்தேச பட்டியல் தவறு
நேற்று குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டேன். அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அதன்படி நேற்ற அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரை தமிழ்நாடு வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் நான் மேற்கொள்ளும் யாத்திரை ஜனவரி 9 ஆம் தேதியுடன் முடிகிறது.
என்னுடைய யாத்திரை நிறைவு விழா நிகழ்வில் பிரதமர் மோடி அல்லது அமித்ஷா இருவரில் யாராவது ஒருவர் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்காக இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தேசபட்டியல் என்பதே தவறான தகவல். அமித்ஷாவிடம் நான் பாஜக போட்டியிடுட் தொகுதி என்று உத்தேச பட்டியல் எதையும் வழங்கவில்லை.
மாற்றங்கள் வரலாம்
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. அதற்குள் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக - பாஜக கூட்டணியில் பிற கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தமிழ்நாட்டில் புதிய கட்சிகள் வெற்றி பெற்றதாகவோ, சுயேச்சைகள் வெற்றி பெற்றதாகவோ பெரிய வரலாறு இல்லை.
3 முனை போட்டி வந்தாலோ, 4 முனை போட்டி வந்தாலோ நிச்சயமாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும். நாங்கள் இருக்க கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்." என்றார். கடந்த சில நாட்களாக பாஜக அளித்துள்ள விருப்ப தொகுதிகளின் உத்தேச பட்டியல் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலான நிலையில், நயினார் அதை மறுத்திருப்பது பாஜகவினரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications