"மாட்டிறைச்சி!" பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் எப்படி அனுமதிக்கலாம்! விகே பாண்டியன் வீடியோவை சாடும் பாஜக
டெல்லி: பிரபல யூடியூபர் காமியா ஜானி பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் சென்று வீடியோ வெளியிட்ட நிலையில், இதனை அங்குள்ள எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
நமது நாட்டில் உள்ள பிரபல யூடியூபர்களில் ஒருவர் காமியா ஜானி. இவர் தனது யூடியூப் சேனலில் பிரபலங்களிடம் நேர்காணல் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவர் இதற்கு முன்பு காங்கிரஸின் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உட்பட பலரை நேர்காணல் எடுத்துள்ளார்.

இதற்கிடையே இந்த காமியா ஜானி இப்போது ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகநாதர் கோயிலுக்குள் சென்று எடுத்த வீடியோ தான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது,
பாஜக சாடல்: இந்த விவகாரத்தை இப்போது கையில் எடுத்துள்ள பாஜக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான கோவிலுக்குள் மாட்டிறைச்சி உண்ணும் நபரை அப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக ஐபிசி 295 கீழ் யூடியூபர் காமியாவை கைது செய்ய வேண்டும் என்று ஒடிசா பாஜக பொதுச் செயலாளர் ஜதின் மொஹந்தி வலியுறுத்தியுள்ளார்.
என்ன வீடியோ: தனது யூடியூப் சேனலில் ஜானி வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வாரிசாகக் கருதப்படும், வி.கே.பாண்டியனுடன் உரையாடுகிறார். அதில் புராதன சின்னங்களை இணைக்கும் பணிகள் குறித்து விகே பாண்டியன் விரிவாகப் பேசியிருந்தார்..
இந்த வி கே பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த விகே பாண்டியன் சமீபத்தில் தான் விருப்ப ஓய்வு பெற்ற பிஜு ஜனதா தள கட்சியிலும் இணைந்தார். இவர் தான் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகப் பார்க்கப்படுகிறார்.
கேமரா எப்படி: அங்கே எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக, ஜானி கோவிலுக்குள் நுழைந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகத்தால் (SJTA) கேமரா பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கே வீடியோ எடுக்கப்பட்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து ஒடிசா பாஜக பொதுச் செயலாளர் ஜதின் மொஹந்தி கூறுகையில், " விகே பாண்டியன் யூடியூபர் காமியா ஜானியுடன் இணைந்து பூரி ஜெகநாதர் கோவிலில் வீடியோ எடுத்து இருக்கிறார். இதே காமியா ஜானி தான் முன்பு மாட்டிறைச்சி சாப்பிடும் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மாட்டிறைச்சி: ஜெகநாதர் கோவிலுக்குள் மாட்டிறைச்சி உண்பவர்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக அவர்கள் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம்" என்றார்.
இந்த விவகாரம் பேசுபொருள் ஆன நிலையில், யூடியூபர் ஜானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஒரு இந்தியராக, இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதே எனது நோக்கம். நான் இந்தியாவின் அனைத்து ஆன்மீக இடங்களுக்கும் சென்று வருகிறேன்.. இது எனக்குக் கிடைத்த பாக்கியம். நான் ஜெகநாதர் கோயிலுக்குச் சென்றது குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரத்தில் யாரும் இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் மாட்டிறைச்சி சாப்பிடவில்லை. எனது வாழ்க்கையில் இதுவரை ஒருபோதும் மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கோயில் நிர்வாகம் தந்த பதில்: இந்த விவகாரத்தில் ஸ்ரீ ஜெகநாதர் கோயில் நிர்வாகமும் பதில் அளித்துள்ளது. அவர்கள் தங்கள் எக்ஸ் பக்கத்தில், "யூடியூபர் கோவில் வளாகத்தில் கேமராவை எடுத்துச் சென்றதாக ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது. அதில் எந்த உண்மையும் இல்லை. யாரிடமாவது ஆதாரம் இருந்தால், அதை அவர்கள் எங்களிடம் கொடுத்தால் அது குறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பதிலடி: அதேபோல ஆளும் பிஜேடி தரப்பிலும் செய்தியாளர் சந்திப்பு நடந்து இது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கோயில்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களில் பாஜகவுக்கு ஆர்வம் இல்லை என்பதையே இது காட்டுவதாக அவர்கள் சாடினர். மேலும், யூடியூபர் ஜானி பல்லவ மடத்திற்குள் தான் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் கோயில் வளாகத்திற்குள் இல்லை என்றும் ஆளும் கட்சி தெளிவுபடுத்தியது.












Click it and Unblock the Notifications