"இந்து" வாக்கு- பாஜக அடிமடியில் அணுகுண்டு வைத்த நிதிஷ் 'ஜாதிவாரி கணக்கெடுப்பு- நிலைகுலைந்த டெல்லி!
டெல்லி: பீகாரில் ஆளும் "இந்தியா" கூட்டணி ஜேடியூ-ஆர்ஜேடி- காங்கிரஸ் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை அறிவித்திருப்பது பாஜகவை ரொம்பவே அலற வைத்திருக்கிறது என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்து.
1990களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் தமிழ்நாடு முதன்மை பங்களித்தது. அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சிகளால் இது சாத்தியமானது. அன்றைய கால கட்டத்தில் பீகாரின் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் கருணாநிதிக்கும் விபி சிங்குக்கும் உறுதுணையாக இருந்தனர்.

தமிழ்நாட்டு அரசியல்: இப்போது புதிய அரசியல் அத்தியாயத்தை பீகார் தொடங்கி வைத்திருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை 'இந்து வாக்கு' வங்கி என்பதுதான் அரசியல் பேராயுதம். இந்துக்கள் Vs சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் என்கிற இருதுருவ மதவெறுப்பு அரசியலில் காலந்தோறும் குளிர்காய்ந்து கொண்டிருந்தது. ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் "இந்து"வாக்கு வங்கி என்பது ஒன்றே இல்லை.. அது உயர்ஜாதியினர், பிற 'ஒடுக்கப்பட்ட சமூகங்களை' அடக்கி ஆள்வதற்கான யுக்தி என்பதை அம்பலப்படுத்தி வந்தது.
பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு: இதோ தமிழ்நாட்டின் வாதங்களை அப்படியே பிரதிபதிலித்திருக்கிறது பீகார் அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. சோ கால்ட் இந்துக்களில் எத்தனை சதவீதம் பேர் பிசி, ஓபிசி, எஸ்சி, எஸ்டி என அக்கு வேறாக ஆணிவேறாக பீகாரின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பகிரங்கப்படுத்திவிட்டது. பீகார் அரசின் கணக்கெடுப்பின் படி முற்படுத்தப்பட்ட அல்லது உயர்ஜாதியினர் 15%. ஆனால் அவர்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீடு 50%. ஏற்கனவே உயர்ஜாதியினருக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தனியாக 10% இடஒதுக்கீடு வழங்கி இருந்தது. இப்போது பாஜகவின் இந்த அரசியல் ஆயுதத்தின் மீது ஜாதிவாரி கணக்கெடுப்பு என்கிற அணு ஆயுதத்தை வீசியிருக்கிறது பீகார் "இந்தியா" கூட்டணி அரசு.
"இந்து"வாக்கு வங்கி அரசியலுக்கு சம்மட்டி அடி: பாஜக இனி "இந்து வாக்கு" வங்கி என மத அடிப்படையில் பேசினால், அப்ப நாங்க யாரு? என "ஜாதி" அடிப்படையில் புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு தர்ம பதிலடி தரப் போகிறது "இந்தியா" கூட்டணி எனும் "எதிர்க்கட்சிகள்" அணி. லோக்சபா தேர்தலில் திமுகவின் 'சனாதன எதிர்ப்பு' என்ற முழக்கத்தையே பிரசாரமாக்கலாம் என்ற பாஜகவின் அந்த கனவுக்கும் இப்போது பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் ஆப்படித்துவிட்டது. 'சனாதன' தர்மம் என்பது உயர்ஜாதிகளுக்கானது; ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட- தலித்- பழங்குடி மக்களுக்கு எதிரானது என்பதை புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்த பீகார் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு. பீகாரைத் தொடர்ந்து ஒடிஷாவும் ஜார்க்கண்ட் மாநிலமும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.
பாஜகவுக்கு மரண சாசனம்?: இதனால் தேசிய அளவில் மத்திய பாஜக அரசே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. எந்த மண்டல் கமிஷன் எனும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்கு எதிராக அரசியல் ஆதாயத்தை பாஜக தேடியதோ அதே ஓபிசி அரசியல்தான் இப்போது பாஜகவின் அரசியல் எதிர்காலத்துக்கு மரண சாசனம் எழுதப் போகிறது என்பதையே இந்த பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பும் தேசிய அளவிலான ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையும் வெளிப்படுத்துகிறது.
பாஜக அடிமடியில் அணுகுண்டு வைத்த நிதிஷ்: இனி எந்த ஒரு மாநிலத்திலும் "இந்து"க்கள், சனாதனிகள் என பிரதமர் மோடி உட்பட எந்த ஒரு பாஜக தலைவர் பேசினாலும் நாங்களும் இந்துக்கள்தான்.. எங்கள் மக்கள் தொகை இவ்வளவு.. எங்களுக்கு எங்கே பிரதிநிதித்துவம் என்ற கேள்வியை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு இப்போதைக்கு பாஜகவிடம் பதில் கிடையாது. பாஜக ஒருபோதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரப்போவதும் இல்லை.. உயர்ஜாதி நலனுக்கான அரசியல் திட்டங்களில் இருந்து பாஜக பின்வாங்கப் போவதும் இல்லை. அதனால்தான் பாஜகவின் அடிமடியிலேயே அணுகுண்டை வைத்துவிட்டனர் நிதிஷ்குமாரும் அவருடன் கை கோர்த்த "இந்தியா" கூட்டணி தலைவர்களும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications