போக்கிரித்தனமாக பாஜக! நாட்டுக்காக உயிர் தியாகத்துக்கும் தயார் ! அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்
டெல்லி: "என்னை பொறுத்தவரை அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியமல்ல. இந்த நாடு தான் முக்கியம். நாட்டுக்காக என்னால் உயிர்த்தியாகம் செய்யவும் முடியும். நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக இதுபோன்ற போக்கிரித்தனத்தில் ஈடுபடக்கூடாது'' என தனது வீட்டின் மீதான தாக்குதல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
‛தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்துக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த படத்தை பொறுத்தவரை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால் இப்படம் குறித்த விவகாரம் பெரும் விவாத பொருளாகி உள்ளது. இந்திய அரசியலிலும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
இதற்கிடையே சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டசபை, பொதுவெளியில் விமர்சனம் செய்திருந்தார். அப்போது ‛‛காஷ்மீர் பண்டித்களுக்கு மறுவாழ்வு தான் வேண்டுமே தவிர திரைப்படம் இல்லை. என்னை பொறுத்தவரை இந்த திரைப்படம் முக்கியமில்லை. இது பாஜகவுக்கு முக்கியமானதாக இருக்கலாம். மேலும் படத்தை யூடியூப்பில் வெளியிட சொல்லுங்கள். அனைவரும் பார்க்கட்டும். திரைப்படத்திற்கு வரி விலக்கு எதற்கு" என தெரிவித்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்
இதற்கு பாஜகவில் எதிர்ப்பு கிளம்பியது. நேற்று எம்பியும், பாஜக இளைஞரணி தேசிய தலைவருமான தேஜஸ்வி சூர்யா தலைமையில் டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்துக்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அப்போது சிலர் தடுப்புகளை மீறி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு சுவர், கதவில் பெயிண்ட் வீசினர். மேலும், தடுப்புகளை சேதப்படுத்தினர்.

அரவிந்த கெஜ்ரிவால் பேச்சு
இதற்கு ஆம்ஆத்மி கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக துடிப்பதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம்ஆத்மியின் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தான் இந்த செயலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கண்டனத்தை தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று இ-ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:

என்னால் சாகவும் முடியும்
"என்னை பொறுத்தவரை அரவிந்த் கெஜ்ரிவால் முக்கியமல்ல. இந்த நாடு தான் முக்கியம். நாட்டுக்காக என்னால் உயிர் தியாகமும் செய்ய முடியும். நாட்டின் மிகப்பெரிய கட்சியான பாஜக இதுபோன்ற போக்கிரித்தனத்தில் ஈடுபடக்கூடாது. இதன்மூலம் நாட்டின் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள்?. நிச்சயமாக தவறான செய்தியை தான் சொல்வார்கள். நாம் 75 ஆண்டுகளை போராடி வீணடித்துவிட்டோம். இனியாவது ஒன்றாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். தற்போது பாஜகவின். இந்த "குண்டர்த்தனத்தால்" நாடு முன்னேறாது. 21ம் நூற்றாண்டில் இந்தியாவுக்காக அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்'' என்றார்.

8 பேர் கைது; விசாரணை
இதற்கிடையே நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி சுவற்றில் பெயிண்ட் வீசியது தொடர்பாக 8 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications