மணிப்பூரில் மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக? டெல்லி பறந்த எம்எல்ஏக்கள்.. ஜனாதிபதி ஆட்சிக்கு குட்பை?
டெல்லி: மணிப்பூரில் குக்கி - மைத்தேயி மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையானது. பல மாதங்களாக இந்த வன்முறையை தொடர்ந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் பாஜகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஆட்சி மணிப்பூரில் நடந்து வரும் நிலையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மேலிடம் அழைப்பின்பேரில் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி பறந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக மணிப்பூர் உள்ளது. இங்கு கடந்த 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆட்சியை பிடித்தது. பாஜகவின் பீரன்சிங் முதல்வரானார்.

கடந்த 2023 மே மாதம் திடீரென்று மணிப்பூரில் வன்முறை வெடித்தது. அங்கு வசிக்கும் குக்கி - மைத்தேயி இனக்குழுவினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் வன்முறையானது.
குக்கி இனத்தை சேர்ந்தவர்கள் பழங்குடியினராக உள்ளனர். இந்நிலையில் தான் மைத்தேயி இனத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு குக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மணிப்பூர் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் விமர்சனம் செய்தது.
இதற்கிடையே தான் மைத்தேயி மக்கள் பழங்குடியினர் அந்தஸ்து கோரி ஊர்வலம் சென்றனர். அதற்கு போட்டியாக குக்கி மக்களும் ஊர்வலம் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். இது மோதலாகி வன்முறையானது. கடந்த 2023 மே 3ம் தேதி தொடங்கிய வன்முறை ஓராண்டுகளை கடந்தும் தொடர்ந்து நடந்தது. இந்த வன்முறையை பாஜக அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் பாஜக முதல்வர் பீரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அங்குள்ள சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. இந்நிலையில் தான் தற்போது பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மணிப்பூர் சட்டசபையின் பதவிக்காலம் 2027 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ளதால் பாஜக அங்கு ஆட்சியை தொடர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பாஜக மேலிடம் அழைப்பின்பேரில் தலைநகர் இம்பாலில் இருந்து நேற்று முதல் பாஜக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர். அங்கு மேலிட தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். பாஜக மேலிடம் கிரீன் சிக்னல் வழங்கும் பட்சத்தில் மீண்டும் மணிப்பூரில் பாஜக ஆட்சியை பிடிக்கும்.
பொதுவாக ஒரு மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமையும்போது அங்குள்ள சட்டசபை கலைக்கப்படும். அல்லது சஸ்பெண்ட் செய்யப்படும். சட்டசபை கலைக்கப்பட்டால் புதிதாக சட்டசபை தேர்தல் நடத்தி தான் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். அதேவேளையில் சட்டசபை சஸ்பெண்ட் செய்யப்பட்டால் கட்சிகள் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வரை தேர்வு செய்யலாம்.
தற்போது மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமைந்தாலும் கூட அங்குள்ள சட்டசபை சஸ்பெண்ட்டில் தான் உள்ளது. இதனால் தான் மீண்டும் பாஜக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மணிப்பூரை எடுத்து கொண்டால் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாஜக 32 தொகுதிகளிலும் வென்றது. என்பிபி கட்சி 7 தொகுதிகளிலும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5, என்பிஎப் தலா 5 தொகுதிகளிலும்கேபிஏ கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. தற்போதும் பாஜகவுக்கு ஆட்சியமைக்க தேவையான எம்எல்ஏக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications