பாஜக வேட்பாளரான கணவரை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த மனைவி.. 2019லும் இதேபோல ஒரு சம்பவம்!
டெல்லி: உத்தர பிரதேசத்தில் சிட்டிங் எம்.பியும், பாஜக வேட்பாளருமான ராம் சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உ.பி மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா தொகுதிக்கு மே 13ம் தேதி நான்காம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாள். வேட்புமனுவை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாள்.
இட்டாவா மக்களவைத் தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் அமைச்சரும் சிட்டிங் எம்.பியுமான ராம்சங்கர் கத்தேரியா களமிறக்கப்பட்டு உள்ளார். இவர், வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், அவரை எதிர்த்து அவரது மனைவியான மிர்துளா கத்தேரியாவும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இவர், இட்டாவா தொகுதியில் சுயேட்சையாகக் களமிறங்கியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போதும் இதேபோல மிர்துளா கத்தேரியா வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர், தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றார். ஆனால், இந்த முறை தனது வேட்பு மனுவைத் திரும்பப் பெறப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளார் மிருதுளா.
வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு இதுதொடர்பாகப் பேசியுள்ள மிருதுளா கத்தேரியா, "இது ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் என் கணவருக்கு எதிராக நிற்கிறேன். அவர் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications