லோக்சபாவில் பயந்து ஓடிய பாஜக எம்பிக்கள்.. 2 பேர் அத்துமீறி நுழைந்த போது நடந்தது என்ன? ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபாவிற்குள் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தின் போது அவைக்குள் என்ன நடந்தது என்பது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் அவை நடவடிக்கை கடந்த 13 ஆம் தேதி வழக்கம் போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதித்த இரண்டு பேர் தங்கள் கைகளில் வைத்து இருந்த வண்ண புகை குப்பிகளை வீசினர். தொடர்ந்து அவையின் மையப்பகுதியை நோக்கி ஓடினர். லோக்சபாவிற்குள் திடீரென குதித்து புகைகுப்பிகளை வீசியதை பார்த்ததும் எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து இருவரையும் எம்.பிக்களே சுற்றி வளைத்து பிடித்தனர். உச்சபட்ச பாதுகாப்பு கெடுபிடிகள் கொண்ட நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற இந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி அவைக்குள் தான் இருந்தார்.
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு மூளையாக செயல்பட்டவர் என மொத்தம் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபக்கம் இருக்க நாடாளுமன்றத்திற்குள் நடைபெற்ற அத்துமீறல் சம்பவத்தின் போது பாஜக எம்.பிக்கள் பயந்து ஓடிவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:- நாடாளுமன்றத்திற்குள் சில இளைஞர்கள் புகுந்து புகை குப்பிகளை வீசினர். அப்போது பாஜக எம்.பிக்கள் அனைவரும் ஓடிவிட்டனர். பாஜகஎம்.பிக்கள் அனைவரும் பயந்து விட்டார்கள்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் இரு கேள்விகள் உள்ளன. பாதுகாப்பு விதி மீறல் பற்றிய ஒரு கேள்வி.. மற்றொரு கேள்வி என்னவென்றால் அவர்கள் ஏன் இந்த போராட்டத்தை மேற்கொண்டார்கள். இதற்கான விடை என்னவென்றால் வேலை வாய்ப்பு இன்மைதான். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு இன்மை பற்றி ஊடகங்கள் பேசவில்லை.ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருந்ததை நான் வீடியோ எடுத்ததை பற்றி பேசுகிறார்கள்" என்றார்.
நாடாளுமன்றத்தில் 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து ஜனநாயகத்தை காப்போம் என்ற பெயரில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சிபிஐ (எம்) கட்சியின் சீதாராம் யெச்சூரி, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று இருந்தனர்.












Click it and Unblock the Notifications