பயங்கரவாதிகளுடன் பாஜக கூட்டணி.. இதான் தேச பக்தியா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு
டெல்லி: பாஜகவுடன் அனைவர் முன்பாகவும் பயங்கரவாதிகளோடு கூட்டணி வைத்துள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாக பேசியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்ததாக கூறி ராஜஸ்தானின் உதய்பூரில் கண்ணையா லால் என்ற தையல் கலைஞர் 2 பேரால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பாஜகவுடன் தொடர்பு
இந்தியாவையே அதிர வைத்த அந்த கொடூர செயலை செய்த இருவரும் எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி கையில் கத்தியுடன் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினர். அவர்கள் இருவரையும் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இருவரில் ரியாஸ் அட்டாரி என்ற நபர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகிய புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

பாஜக பிரமுகர்களுடன் நெருக்கம்
சம்பந்தப்பட்ட நபர் பாஜகவின் சிறுபான்மை அணியில் சேர விரும்பியதை அக்கட்சியின் நிர்வாகியே தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம் தெரிவித்த வீடியோவும் நேற்று வெளியானது. கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக தலைவர் ஒருவர் கழுத்தில் பாஜக கட்சித்துண்டு அணிவித்த புகைப்படங்களும் வெளியாகின சர்ச்சையை ஏற்படுத்தின. பலரும் இவற்றை பகிர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தனர். இது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாஜக ரியாஸ் அட்டாரி பாஜகவை சேர்ந்தவர் இல்லை என மறுத்தது.

காஷ்மீரில் கைதான பயங்கரவாதி
ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இருவரை துக்சா கிராம மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், குண்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. பயங்கரவாதிகளை பிடித்துக்கொடுத்து பொதுமக்களை பாராட்டிய போலீசார், பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

பாஜக உறுப்பினரான பயங்கரவாதி
கைது செய்யப்பட்ட பைசல் அஹமது மற்றும் தலிப் ஹுசைன் ஆகிய இருவரில் தலிப் ஹுசைன் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி என்பது தெரிய வந்திருக்கிறது. ரஜோரி பகுதியை சேர்ந்த தலிப் ஹுசைன், பாஜகவில் இணைந்து மூத்த தலைவர்கள் பலருடன் புகைப்படங்களை எடுத்திருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாஜகவின் சிறுபான்மை பிரிவு ஊடக அணி பொறுப்பாளராக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

ஜெய்ராம் ரமேஷ் கருத்து
இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், உதய்பூர் கொலையாளி ரியாஸ் அட்டாரிக்கு பாஜக பிரமுகர் துண்டு மாட்டிவிடும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து, "பாஜகவுடைய தேச பக்தியின் உண்மை இந்த புகைப்படத்தில் தெரிகிறது. பாஜக பயங்கரவாதிகளுடன் கூட்டணி வைத்திருப்பது அனைவரது முன்பும் வந்துள்ளது." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications