சிராக் பாஸ்வானை முன்வைத்து நிதிஷ்குமாரின் சகாப்தத்தை திட்டமிட்டு முடித்த பாஜக!
டெல்லி: பீகார் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வானை தனியே நிற்க வைத்து முதல்வர் நிதிஷ்குமாரின் சகாப்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது பாஜக என்பதையே எக்ஸிட் போல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
Recommended Video
வட இந்தியாவில் பீகாரில்தான் பாரதிய ஜனதா கட்சியால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க முடியாமல் உள்ளது. மாநில கட்சிகளான ஜேடியூ, ஆர்ஜேடி ஆகியவை முதல் 2 இடங்களில் இருந்து வருகின்றன.
ஜேடியூ தயவில்தான் பாஜக ஆட்சியில் அமர முடிந்தது. நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூவின் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வர பாஜக கையில் எடுத்த ஆயுதம்தான் சிராக் பாஸ்வான். தொடர்ந்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது லோக் ஜனசக்தி (எல்ஜேபி).

எல்ஜேபி பிடிவாதம்
ஆனால் பீகாரில் தற்போது நடைபெற்ற தேர்தலில் பாஜக- ஜேடியூ அணியில் சிராக் பாஸ்வானின் எல்ஜேபி இடம்பெறவில்லை. அதேநேரத்தில் பாஜக- ஜேடியூ அணியில் ஜேடியூவுக்கு எதிராக மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் எல்ஜேபி அறிவித்தது.

பாஜகவுக்கு ஜேடியூ எச்சரிக்கை
இது பாஜக- ஜேடியூ கடும் மோதலையும் உருவாக்கியது. எல்ஜேபியின் இந்த வினோத நிலைப்பாட்டை திட்டவட்டமாக பாஜக எதிர்க்கவில்லை என்பது ஜேடியூவின் தொடர் குற்றச்சாட்டு. பாஜக 2 படகுகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முயற்சிப்பது விபரீதத்தில்தான் முடியும் என்று கூட ஜேடியூ எச்சரித்தது.

பாஜக போட்ட கணக்கு
ஆனாலும் எல்ஜேபியிடம் மென்மைப்போக்கைத்தான் காட்டியது பாஜக. பாஜகவைப் பொறுத்தவரை ஜேடியூவை விட அதிக இடங்களில் வெல்ல வேண்டும்; ஏதோ ஒருவகையில் கூட்டணி வைத்து தொடர்ந்து முதல்வராகும் நிதிஷ்குமார் சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. எல்ஜேபி, ஜேடியூவை எதிர்த்து நின்றால் நிச்சயம் ஜேடியூவுக்கு சிக்கல் என தெரிந்தும் பாஜக கண்டுகொள்ளாமல் இருந்தது.

முடிவுக்கு வருகிறது நிதிஷ் சகாப்தம்?
இந்த நிலையில் இன்று வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் நிதிஷ்குமார் எதிர்ப்பு அலை இருப்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக நினைத்தது போலவே நிதிஷ்குமாரின் சகாப்தம் முடிவுக்கு வர உள்ளது. ஜேடியூவுக்கு இம்முறை அதிக இடங்கள் கிடைக்காது என்றே எக்ஸிட் போல் முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. சிராக் பாஸ்வானை வைத்து பாஜக போட்ட கணக்கு மிஸ் ஆகவில்லை- நிதிஷ்குமார் எனும் அரசியல் சாணக்கியரின் சகாப்தத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கிறது பாஜக.












Click it and Unblock the Notifications