இனி ரயில்களில் மாதம் ஒரு முறை பெட்ஷீட் துவைக்கப்படாது! அதற்கு பதிலாக..! ரயில்வே துறை அதிகாரி தகவல்
டெல்லி: ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பெட்ஷீட்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில் புதிய தகவலை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவும் பயணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாகவே இருக்கும் என சொல்லப்படுகிறது.
நாட்டிலேயே மிகப் பெரிய பொது போக்குவரத்து துறை என்றால் அது ரயில்கள்தான். சுமார் 75 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ரயில்வே டிராக்குடன், உலகிலேயே 4ஆவது பெரிய ரயில்வே நெட்வொர்க் இந்தியாவில்தான் உள்ளது.

இதில் 45 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ளன. ரயில்களில் கட்டணம் குறைவு, படுத்துக் கொண்டே நீண்ட தூரம் பயணம் செய்யும் வசதி, ஏசி வசதி, அலுப்பு தெரியாது என்பதால் இந்த ரயில் பயணங்களை பொதுமக்கள் விரும்புகிறார்கள்.
தொலைதூர பயணங்கள் என்று வரும் போது ரயில் பயணங்களுக்கு மக்கள் முன்னுரிமை கொடுக்கிறார்கள். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. இத்தனை நன்மைகள் இருந்தாலும் சாதாரண பெட்டிகளை குறைப்பது , கட்டணம் அதிகம் உள்ள வந்தே பாரத் ரயில்களுக்கு முன்னுரிமை கொடுப்பது, தரமற்ற உணவு, சுகாதாரமில்லாத டாய்லெட் என பல குற்றச்சாட்டுகள் ரயில்வே மீது சொல்லப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் , சென்னை - கோவை ரயில்களில் ஏசி வேலை செய்யவில்லை என்றும் போர்வைகள் துர்நாற்றம் வீசுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை தினங்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகின்றன என்பது குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு ரயில்வே அமைச்சகத்தின் ஹவுஸ் கீப்பீங் மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷி குப்தா கூறியிருப்பதாவது: கீழே விரிக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்கப்படுகின்றன. கம்பளிகள் மட்டும் மாதத்திற்கு ஒரு முறை துவைப்பதாக தெரிவித்திருந்தார்.
இது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, நாற்றம் உள்ளிட்டவை இல்லாவிட்டால் அப்படியே மடித்து மீண்டும் அதை மற்ற பயணியின் பயன்பாட்டுக்கு வைக்கப்படுகிறதாம். அழுக்கு இருந்தால் மட்டுமே விரிப்புகள் துவைக்கப்படுமாம். கம்பளிகளை துவைப்பது கடினமானது.
ரயில்வேயில் ஏசி கோச்சில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை கவர் உள்ளிட்டவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன. இந்த மையம் அமைந்துள்ள இடம், சலவை இயந்திரம் ஆகியவை ரயில்வே துறைக்கு சொந்தமானது.
இந்த நிலையில் இந்த பெட்ஷிட் துவைப்பது குறித்து வடகிழக்கு பிராந்திய ரயில்வே சிபிஆர்ஓ கபின்ஜல் கிஷோர் சர்மா கூறியதாவது: பயணிகளுக்கு கொடுக்கப்படும் கம்பளிகள் மாதத்திற்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது. இனி 15 நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படும். அதே வேளையில் பெர்த்தின் மீது போடப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்திய பிறகு துவைக்கப்படுகின்றன என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications