இந்திய பாதுகாப்பில் பெரிய சிக்கல்.. அப்படியே சரிந்த முக்கிய ஆயுத உற்பத்தி! ஷாக் ரிப்போர்ட்!
டெல்லி: பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தியானது கடந்த ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது இந்திய கடற்படையின் போர்த் திறனைப் பாதிக்கும் ஒரு தீவிரமான தொழில்துறை நெருக்கடியாகப் பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் தற்போது நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டிருப்பது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

என்ன காரணம்?
அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுதான் இதற்கு காரணம். ஹைதராபாத் மற்றும் நாக்பூரில் உள்ள முக்கிய உற்பத்தி ஆலைகளிலிருந்து சுமார் 56 அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் லக்னோ மற்றும் ராஜஸ்தானின் பிலானி ஆகிய இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி சுமை அதிகரிப்பு
அனுபவமிக்க மாஸ்டர் டெக்னீஷியன்கள் திடீரென மாற்றப்பட்டதால், துல்லியமான ஏவுகணைப் பொருத்தமைப்பு (Assembly lines) மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பணிகளில் பெரும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது மற்ற தொழிலாளர்களையும் பாதித்திருக்கிறது. திடீர் இடமாற்றம், பணிச்சுமை மற்றும் குடும்பச் சூழல் பாதிப்பு காரணமாக ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்த மன அழுத்தத்தின் காரணமாக சமீபத்திய மாதங்களில் இரண்டு இளம் ஊழியர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகள் தாமதமாகலாம்
இப்படியாக உற்பத்தி குறைந்துள்ளதால், ஏவுகணைகளை வழங்குவதில் பல ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம் என்று பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்திய கடற்படைக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த 2024-ல் கையெழுத்தான ₹23,000 கோடி மதிப்பிலான 220 நீட்டிக்கப்பட்ட தூர (BrahMos-ER) ஏவுகணைகளுக்கான ஆர்டர் இதனால் பாதிக்கப்படலாம். இது விசாகப்பட்டினம் மற்றும் கொல்கத்தா ரக போர்க்கப்பல்களின் தாக்குதல் திறனைப் பாதிக்கும்.
இந்திய கடற்படை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் முதன்மைத் தாக்குதல் ஆயுதமான பிரம்மோஸ் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உற்பத்தி பாதிப்பு என்பது, நமக்கு மட்டும் பாதிப்பு கிடையாது. இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நேரத்தில் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் இந்தியாவின் ஏற்றுமதி நற்பெயரை பாதிக்கும்.
லக்னோ மற்றும் பிலானி ஆகிய இடங்களில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி உற்பத்தியைப் பெருக்க எடுத்த முயற்சி, அனுபவம் வாய்ந்த ஊழியர்களைச் சரியாகக் கையாளாததால் தற்காலிக முடக்கத்தைச் சந்தித்துள்ளது. இந்த பிரச்சனை உடனே சரி செய்யப்பட வேண்டும் என்று பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் வலியுறுத்த தொடங்கியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications