அள்ளி அள்ளி தேர்தல் நன்கொடை கொடுத்த நிறுவனம்.. அசாம் அரசுடன் மிகப்பெரிய டீல்! இப்படி ஒரு லிங்க்கா?
டெல்லி: பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனம் பல கோடி ரூபாய் தேர்தல் நிதி அளித்த நிலையில், அந்த நிறுவனத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு அசாம் மாநில அரசு மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதற்கான பணிகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன.

மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக பாஜக கட்சிக்கு கிடைத்த நன்கொடை மட்டும் ரூ.11,562.5 கோடி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3,412 கோடியுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள பட்டியலில் பார்தி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், பிரைட் ஸ்டார் இன்வெஸ்ட்மெண்ட், சன் பார்மா ஆகிய ஏராளமான நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இந்த தேர்தல் பத்திர நன்கொடை லிஸ்ட் மூலமாக பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு கோடி கோடியாக நன்கொடை அளித்துள்ள நிறுவனங்கள், அரசு மூலமாக சில அனுகூலங்களைப் பெற்றுள்ளன. அதுவும், நன்கொடை வழங்கப்பட்ட காலட்டத்திலேயே, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் டெண்டர்கள், பணி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பிரைட் ஸ்டார் நிறுவனம்: Bright star investment என்ற நிறுவனம் பல கோடி ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடையாக வழங்கி உள்ள நிலையில் இதே நிறுவனத்துடன் கடந்த 2022 ஆம் ஆண்டு அசாம் மாநில அரசு மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதற்கான அரசின் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அசாமில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அசாம் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பைக் கட்டும் பணியில் தனியார் துறையுடன் முதல்முறையாக கடந்த 2022ல் கைகோர்த்தது அசாம் மாநில பாஜக அரசு.
ராதாகிஷன் தமானியின் Bright star investment நிறுவனம் அசாம் மாநிலம் முழுவதும் மருத்துவ உட்கட்டமைப்புக்கான பணிகளை மேற்கொள்ள அசாம் அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. 2019 காலகட்டத்தில் பிரைட் ஸ்டார் நிறுவனம் ரூபாய் 10 கோடி தேர்தல் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications