காலேஜ் போகாமல் இருப்பதே நல்லது.. சம்பளம் 2 மடங்கு அதிகம்! சர்ச்சையை கிளப்பிய பிரபல தொழிலதிபர்
டெல்லி: இந்தியாவில் ஒரு மாணவர் பள்ளிப் படிப்பை முடித்ததும், அடுத்து என்ன என்ற கேள்வி வரும்போது அனைவரது பதிலும் "ஏதாவது ஒரு டிகிரி " என்பதாகத்தான் இருக்கும். ஆனால், மார்செலஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான சௌரப் முகர்ஜியா, இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு சர்ச்சை கருத்தைக் கூறியிருக்கிறார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதிலும் தென்னிந்தியாவில் கல்விக்கு நாம் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறோம். பெரும்பாலான மாணவர்கள் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடிக்கிறார்கள். அதேநேரம் சிலர் கல்லூரி படிப்பு தேவையில்லை என்ற சர்ச்சை கருத்துகளையும் கூறி வருகிறார்கள். அப்படி தான் மார்செலஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான சௌரப் முகர்ஜியா இப்போது கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

12ம் வகுப்பு போதும்
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "இந்தியாவில் பட்டதாரிகளை விட, 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்பவர்களே சில நேரங்களில் அதிகம் சம்பாதிக்கிறார்கள்" என்று வாதிட்டுள்ளார்.
முகர்ஜியாவின் முக்கிய விமர்சனம் இந்தியாவின் கல்வி முறையின் மீதுதான். அவர் மேலும், "நமது கல்வி முறை இன்னும் 'ரட்டா மாரோ' எனப்படும் மனப்பாடம் செய்து, தேர்வில் அப்படியே எழுதுவதையே அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர் விமர்சிக்கிறார். இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் , பயோடெக்னாலஜி மற்றும் க்ளின் எனர்ஜி என அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால், நமது கல்லூரிகள் மாணவர்களுக்குச் சிந்திக்கக் கற்றுக்கொடுப்பதில்லை, மாறாகத் தகவல்களைச் சேமிக்க மட்டுமே கற்றுக்கொடுக்கின்றன. இது நவீன வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களைத் தகுதியற்றவர்களாக மாற்றுகிறது.
வேலையில்லா திண்டாட்டம்
இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்து வெளிவரும் 100 மாணவர்களில், வெறும் 3 பேருக்கு மட்டுமே அவர்கள் முடித்த அதே ஆண்டில் வேலை கிடைக்கிறது. பட்டதாரிகளிடையே வேலையில்லா திண்டாட்டம் 30% முதல் 40 வரை உள்ளது. ஆனால், பட்டப்படிப்பை முடிக்காதோர் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் வெறும் 3%ஆக மட்டுமே இருக்கிறது. அதாவது இந்தியாவில் பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் இருப்பதே மேலானது" என்ற கசப்பான உண்மையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மும்பையில் வேலைவாய்ப்பு சந்தையை உதாரணமாகக் காட்டி அவர் ஒரு ஒப்பீட்டைச் செய்கிறார். ஒரு பட்டதாரி இளைஞர் ஏசி ரூமில் அமர்ந்து பார்க்கும் வேலையை விட, ஒரு கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளி இருமடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும் என்கிறார். குறிப்பாக, ஒரு ஜேசிபி இயந்திரத்தை இயக்குபவர், ஒரு சாதாரணப் பட்டதாரியை விட அதிக வருமானம் ஈட்டுகிறார் என்றும் இதற்குக் காரணம், அங்கு 'திறமை' முக்கியத்துவம் பெறுகிறது, வெறும் 'சான்றிதழ்' அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
முக்கியமான துறைகள்
அவர் மேலும், "இந்தியா ஏஐ-யிலும் இல்லை, ஈவி-யிலும் இல்லை.. அதாவது, உலகம் கொண்டாடும் நவீனத் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா இன்னும் பெரிய அளவில் தடம் பதிக்கவில்லை. இதற்குக் காரணம், நமது பள்ளிக் காலத்திலிருந்தே மாணவர்களுக்கு 'சிந்திக்கும் திறன்' வளர்க்கப்படுவதில்லை. வெறும் மனப்பாடம் செய்வதால், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் நாம் பின்தங்கியுள்ளோம்" என்கிறார்.
கல்வி என்பது வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். வேலை வழங்குபவர்கள் இப்போது பட்டப்படிப்பை விட, ஒருவரிடம் உள்ள தனித்துவமான திறமையையே எதிர்பார்க்கிறார்கள். இதை உணர்ந்து கல்வி முறையில் மாற்றம் வர வேண்டும் என்பதே முகர்ஜியாவின் வாதம்.
திறமை + டிகிரி
சௌரப் முகர்ஜியாவின் கருத்துக்கள் தற்போதைய கல்வி முறையில் இருக்கும் சிக்கல்களை காட்டுகிறது. அதேநேரம் ஒரு சிலர் 12-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கடின உழைப்பாலும் தனித்திறமையாலும் பெரிய அளவில் சம்பாதிக்கலாம் என்பது உண்மைதான். இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு ஒரு பட்டப்படிப்பு என்பது இன்றும் ஒரு பாதுகாப்புக் கவசமாகவே இருக்கிறது. எனவே, டிகிரி வேண்டாம் என்பதை விட, திறமையுடன் கூடிய டிகிரி என்பதே இன்றைய காலத்தின் கட்டாயம். வெறும் காகிதச் சான்றிதழ்களை மட்டும் நம்பியிருக்காமல், மாறிவரும் உலகிற்கு ஏற்பப் புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதே இளைஞர்களுக்குச் சிறந்தது.












Click it and Unblock the Notifications