மதுரவாயலில் காதலனுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளை திருடிய சிறுமி.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: 16 வயது சிறுமிகள் இனகவர்ச்சியால் உணர்ச்சி வேகத்தில் காதல் விவகாரத்தில் முடிவெடுப்பது அதிகரிக்கிறது. இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் பார்த்து வளர்ந்த இளம் சிறார்கள், காதல் வலையில் சிக்கிவிடுகிறார்கள். காதலனின் ஏக்கம், வறுமை,எதிர்பாராத சூழல் போன்ற காரணங்களுக்காக, பண உதவியும் சிறுமிகள் செய்கிறார்கள். அப்படிதான் சென்னை மதுரவாயலில் சிறுமி ஒருவர் தனது வீட்டில் இருந்த 129 பவுன் தங்க நகைகளை சிறுக சிறுக திருடி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர்.
பருவ வயதில் உள்ள சிறுமிகள் மிக எளிதாக உணர்ச்சிவசப்படுவதை சாதகமாக்கிக் கொண்டு "அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை, திடீரென அவசரமாக மருத்துவச் செலவு வந்துவிட்டது, கல்லூரியில் கட்டணம் செலுத்த வேண்டும்... வாகனம் ரிப்பேர் ஆகிவிட்டது மாற்ற வேண்டும் என்று பொய் சொல்லி ஏமாற்றுகிறார்கள். காதலியிடம் கெஞ்சி உருக்கமாக காதலன்கள் கேட்பதால், தனது காதலன் கஷ்டப்படக்கூடாது என்று கேட்கும் உதவிகளை கண்ணை மூடிக்கொண்டு சிறுமிகள் செய்கிறார்கள்.

இதனை பயன்படுத்தி சிறிது நேரம் கூட வியர்வை சிந்தி உழைக்க தயாராக இல்லாத இளைஞர்கள், குறுக்கு வழியில் செல்வந்தனாக மாற விரும்புகிறார்கள். அதன்படி காதலியின் பணத்தில் பைக், கார், ஐ போன், ஊர் சுற்றுவது என்று ஜாலியாக வாழ்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் மதுரவாயலில் நடந்துள்ளது. சிறுமியிடம் காதல் என்ற பெயரில் பணத்தை பறித்துள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை மதுரவாயல் பகுதியில் 51 வயது ஆகும் பன்னீர்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவரது அண்ணன் இறந்துவிட்டதால் இவரது அண்ணி மற்றும் 3 பெண் பிள்ளைகளை பன்னீர்செல்வனே கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பன்னீர்செல்வன் தனக்கு சொந்தமான 22 பவுன் நகைகளை தனது அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கும்படி கூறியிருக்கிறார்.. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில் இருந்த நகைகளை சரி பார்த்தபோது, பன்னீர்செல்வன் கொடுத்த 22 பவுன் நகைகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 107 பவுன் நகைகள் என மொத்தம் 129 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருக்கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் வீட்டின் கதவோ அல்லது பீரோவோ உடைக்கப்படவில்லை. எனவே வீட்டில் உள்ள நபர்களே இதனை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரமாக நடத்தினார்கள். அப்போது, பன்னீர்செல்வனின் அண்ணனின் 3-வது மகளான 18 வயது நிறைவடையாத சிறுமியின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர்தான் நகையை திருடி காதலனுக்கு கொடுத்தது தெரியவந்தது.
கடந்த ஆண்டு பிளஸ்-2 விடுமுறையின் போது, சிறுமி தற்காலிகமாக ஒரு வேலைக்கு போயிருக்கிறார். அப்போது அங்கு வேலை செய்த செனாய் நகரை சேர்ந்த கார்த்திக் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இதை கார்த்திக் சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவ செலவிற்கு பணம் தேவைப்படுகிறது என்று உருக்கமாக சிறுமியிடம் பேசினாராம். இதனால் காதலனின் வார்த்தைகளை உண்மை என்று கண்ணை மூடிக்கொண்டு நம்பிய சிறுமி, யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்த நகைகளை சிறுக சிறுக திருடி கார்த்திக்கிடம் கொடுத்திருக்கிறார். வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளையும் சிறுமி கார்த்திக்கிடம் கொடுத்துள்ளாராம்
சிறுமியிடம் ஏமாற்றி வாங்கிய நகைகளை கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அடகு வைத்தும், விற்றும் பணமாக்கி உள்ளார்களாம். அந்த பணத்தில் புதிதாக கார், இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார்களாம். இந்த மோசடி சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான ஆவடியை சேர்ந்த குமரகோபால் (20), பிரகாஷ் (22), ரமேஷ் (47), சூர்யா (28) ஆகிய 5 பேரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர்.
சிறுமியின் காதலன் மற்றும அவர்களுடைய நண்பர்களிடமிருந்து 6 பவுன் தங்கம் நகைகள், ஒரு செல்போன், ரூ.50 ஆயிரம், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். காதலுக்காக வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை அள்ளி கொடுத்த சிறுமியின் செயல் மதுரவாயலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.














Click it and Unblock the Notifications