எடப்பாடி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏ சுகுமார்.. தவெக பக்கம் தாவுகிறாரா? அவரே கொடுத்த பதில்
ராணிப்பேட்டை: ஆற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ் எம் சுகுமார், எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்ததாக தகவல்கள் பரவின. இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணையப் போகிறாரா என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த சூழலில் எம்.எல்.ஏ சுகுமார், 100% மாற்றுக்கட்சிக்கு நான் செல்ல மாட்டேன் என்றும், இடுகாட்டிற்கு செல்வேன் தவிர மாற்றுக் கட்சிக்கு செல்ல மாட்டேன் என கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ எஸ்.எம் சுகுமார் கலந்து கொண்டு தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சுகுமார் கூறியதாவது:-

அதிமுக தலைமை கூட்டத்தை தான் புறக்கணித்ததாக தகவல் பரவி வருகின்றன. ஆனால் நான் அந்த கூட்டத்தை புறக்கணிக்கவில்லை. ஆற்காடு சட்டசபை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருகின்றேன். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
எனவே நானும் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து எடுத்து கூறுவதற்காக தலைமை கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரிடம் முழுமையாக அனுமதி பெற்று தான் இக்கோட்டத்தில் கலந்து கொண்டேன். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.. தொகுதி பிரச்சனை குறித்து அதிக கேள்விகள் கேட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது நான் மட்டும்தான். நான் முழுமையாக அதிமுகவை சேர்ந்தவன் தான்.
நான் நூறு சதவீதம் மாற்றுக் கட்சிக்கு நான் செல்ல மாட்டேன்.. இடுகாட்டிற்கு செல்வேனே தவிர மாற்றுக் கட்சிக்கு செல்ல மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நான் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். எனவே அதிமுகவிலிருந்து பின் வாங்க மாட்டேன். எனவே யாரும் தேவையற்ற பதவிகளை, தேவையற்ற பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம்.. என்று கூறினார்.













Click it and Unblock the Notifications