தவெக எம்எல்ஏவிடம் பேர வழக்கில் நீதிமன்றத்தில் பெரும் விவாதம்: போலீஸ் காவல் குறித்து இன்று தீர்ப்பு
சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் பெரும் விவாதம் நடந்தது. கைதான 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்று அறிவிப்பதாக கூறியுள்ளார்.
த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜ் தன்னிடம ரூ.35 கோடி பேரம் பேசியதாக கூறிய ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். இந்த புகாரினை விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார், தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெரம்பூரைச் சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ், கார்த்தி உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ரமேஷ், நரேஷ், கார்த்தி ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார் தரப்பில் சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரமேஷ் உள்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
திருவல்லிக்கேணி உதவி போலீஸ் கமிஷனர் அழகு, சாட்சி கூண்டில் நின்று வழக்கு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், "இந்த வழக்கு தொடர்பாக நரேஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு ரூ.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்தி குற்ற சதியையும், உண்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களை அடையாளம் காண வேண்டியது அவசியம் ஆகும். சட்டவிரோத பண பரிவர்த்தனை, கண்காணிப்பு கேமரா பதிவு குறித்து விசாரிக்க உள்ளோம். அவர்கள் பயன்படுத்திய செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்ற வேண்டியது இருப்பதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, "ஆட்சியை கவிழ்ப்பது என்பது பயங்கரவாதத்துடன் தொடர்புடையது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க திட்டமிடப்பட்டது என்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். எப்படி இதுபோன்று வழக்கு பதிவு செய்தார்கள் என தெரியவில்லை.
கண்காணிப்பு கேமரா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் கண்காணிப்பு கேமரா குறித்த எந்த தகவலும் கிடையாது, இதுவரை செல்போன்களும், ஒரு லட்சம் ரூபாய் பணமும், நில ஆவணம் ஒன்று மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறுகிறது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக போலீசார் கூறுவதில் இருந்தே, தீய நோக்கத்துடன், அரசியல் காரணங்களுக்காக முதல் தகவல் அறிக்கையை காவல்துறை பதிவு செய்துள்ளது நினைக்கிறோம். எனவே, காவலில் எடுத்து விசாரிக்க கோரும் மனுவை நிராகரிக்க வேண்டும்" இவ்வாறு என்ஆர் இளங்கோ வாதாடினார்.
போலீசார் தரப்பில் ஆஜரான வக்கீல் அருண் அன்புமணி, "வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஐபோன் பயன்படுத்தி உள்ளனர். அனைத்து தகவல்களையும் அழித்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ள ஒரு நபர், உரையாடல்களை அங்கிருந்தபடியே அழித்திருக்கிறார்.
கரூரில் கைதானவரின் ஒப்புதல் வாக்குமூலம் தான் ஆரம்ப புள்ளியாக அமைந்தது. கைதான ஒருவர் வீட்டில் ரூ.1 லட்சமும், மற்றொருவர் வீட்டில் ரூ.13 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குதிரை பேரம் பேசப்பட்ட தொகையான ரூ.35 கோடி என்பது சிறிய தொகை இல்லை. எங்கிருந்து இவ்வளவு பணம் அவர்களுக்கு கிடைக்கிறது என கண்டறிய வேண்டிய திருக்கிறது. வீடியோ ஆதாரங்களில் பலரின் தொடர்பில் இவர்கள் இருப்பது தெரியவருவதால் ஒவ்வொருவரையும் கண்டறிய வேண்டிய அவசியம் ஆகும். எனவே, இவர்களை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்" இவ்வாறு வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, ரமேஷ், நரேஷ், கார்த்தி ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் அனுப்புவது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள், தங்கள் வீடுகளில் ஏற்கனவே போலீசார் சோதனை மேற்கொண்டுவிட்டதாகவும், வெற்று காகிதத்தில் மிரட்டி கையெழுத்து வாங்கியதாகவும் குற்றம்சாட்டினார்கள். மேலும், தங்களுக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறி போலீஸ் காவலுக்கு அனுப்ப ஆட்சேபனை தெரிவித்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது இன்று தீர்ப்பு கூறப்படும் என கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications