“பிரதர்.. சென்னைல நாம எப்போ ஒண்ணா சைக்கிள் ஓட்டலாம்?” ஸ்டாலினிடம் கேட்ட ராகுல் காந்தி!
டெல்லி: "பிரதர்.. சென்னையில் ஒன்றாக சேர்ந்து எப்போது சைக்கிள் ஓட்டலாம்?" என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சிகாகோ நகரில் சைக்கிள் ஓட்டிய வீடியோ வெளியான நிலையில், சென்னையில் சேர்ந்து சைக்கிள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளார் ராகுல்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ நகருக்கு சென்றுள்ளார். முன்னதாக, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த முதலீட்டாளர் சந்திப்பில் நோக்கியா உள்ளிட்ட 8 நிறுவனங்களுடன் 4600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1300 கோடிக்கான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
சான் பிரான்சிஸ்கோ நகரில் பயன்பாட்டில் இருக்கும் ஓட்டுநர் இல்லா தானியங்கி காரில் பயணித்த வீடியோவையும் முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில், பகிர்ந்திருந்தார். தொடர்ந்து நேற்று சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சிகாகோ நகருக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மாலை வேளையில் சிகாகோ நகரின் கடற்கரையில் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த வீடியோயை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், "மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோவை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சகோதரரே.. சென்னையில் நாம் இருவரும் ஒன்றாக எப்போது சைக்கிள் ஓட்டுவோம்?" எனக் கேட்டுள்ளார். ஆக, சென்னையில் முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் சைக்கிள் ஓட்டும் நாள் வரப்போகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் - காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருவரும் பல்வேறு சமயங்களில் ஒருவொருக்கொருவர் தங்கள் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். ராகுல் காந்தி, தன் அண்ணன் என ஸ்டாலினை குறிப்பிடுவார். அரசியல் தலைவர்களில் நான் அண்ணன் எனச் சொல்லும் ஒரே தலைவர் ஸ்டாலின் தான் என்றும் ராகுல் காந்தி பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கோவை செட்டிபாளையத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராகுல் காந்தி, வரும் வழியில் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார். சாலையில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து கடைக்குச் சென்று ஸ்வீட் வாங்கினார் ராகுல் காந்தி.
அங்கிருந்த பெண் ஒருவர் "யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார்?" என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு அவர், "என்னுடைய சகோதரர் ஸ்டாலினுக்காக" என்று பதிலளித்தார். பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதனை மிகுந்த அன்போடு பெற்றுக்கொண்டார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications