இனி ரூ.10 லட்சம் வரை வருமான வரி கிடையாது? நிர்மலா சீதாராமனுக்கு ஆர்எஸ்எஸ் தொழில் சங்கம் டிமாண்ட்
டெல்லி: நம் நாட்டில் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் பெறுவோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 ஆக அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சென்றுள்ளது. இதனால் இதுதொடர்பாக வரும் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமயைிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக செயல்பட்டு வருகிறார். 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த மத்திய பட்ஜெட் என்பது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன்படி 2025-2026ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுவீச்சில் தயாராகி வருகிறார்.
அதன்படி கடந்த மாதம் (டிசம்பர்) 6ம் தேதி முதல் நேற்று வரை டெல்லியில் பல்வேறு துறை சார்ந்தவர்களை அழைத்து நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினர். ஒரு மாதமாக நடந்த இந்த ஆலோசனை என்பது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இவர்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த ஆலோசனையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவு சார்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸின் தொழிலாளர் சங்கமாக பாரதிய மஸ்தூர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் பவன் குமார் உள்ளிட்டவர்கள் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில், ‛‛ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். விவசாயத்துக்காக தனி பேக்கேஜை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணி நாட்களை 100ல் இருந்து 200 ஆக அதிகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி ரீபண்ட் மற்றும் சீனா பொருட்களின் இறக்குமதி மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
அதேபோல் தோட்ட தொழிலாளர், பீடி தொழிலாளர்கள், மீனவர்களுக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். பணிக்கொடை கணக்கீட்டு நாட்களை (Gratuity calculation days) ஆண்டுக்கு 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பாரதிய மஸ்தூர் சங்கம் என்பது ஒன்றும் சாதாரணமானது இல்லை. இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிரான போக்கை கண்டித்து இதற்கு முன்பு போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய வரலாறு கொண்டதாகும். அதன்படி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், இடதுசாரிகளின் கூட்டணி அரசாக அமைந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் குஜ்ரால் அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து இந்த பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டங்களை நடத்தி உள்ளது.
தற்போதும் மத்திய பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பாரதிய மஸ்தூர் சங்கம் டிமாண்ட் வைத்துள்ளது. பாஜக மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் இரண்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருபகுதியாக உள்ளன. இதனால் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications