அஜித் தோவல் பிரிவில் கைவைத்த நிர்மலா சீதாராமன்.. உளவு பிரிவுக்கு நிதி குறைத்தது ஏன்? பரபர பின்னணி
டெல்லி: நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணியாற்றி வரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் இயங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உளவுத்துறைக்கான நிதி என்பது நேற்றைய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது.
2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக புதிய வருமான வரி முறையை பின்பற்றுவோருக்கு ரூ.7 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்று இருப்பதை ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் மிடில் கிளாஸ் மக்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. அதேபோல் இந்த பட்ஜெட்டில் துறை வாரியாக ஒவ்வொரு துறைகளுக்கும் நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிகபட்சமாக மத்திய பாதுகாப்பு துறைக்கு நிதி என்பது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்பு துறைக்கு ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 732 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் உள்பட முப்படைகளையும் பலமாக கட்டமைக்க வேண்டும் என்பதால் இந்த துறைக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய உள்துறையில் எல்லை பாதுகாப்பு படை உள்பட முக்கிய பாதுகாப்பு படைகள் வருகின்றன. இந்த துறை நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் மத்திய உள்துறைக்கு ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 211 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் உளவுத்துறைக்கு பட்ஜெட்டில் நிதி என்பது குறைக்கப்பட்டுள்ளது. அதாவது நம்நாட்டின் உள்விவகாரம் மற்றும் வெளிவிவகாரங்களை கண்காணித்து பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை தேசிய பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்டு வருகிறது.
இதன் அலுவலகம் தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS or National Security Council)என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராஜிந்தர் கண்ணா, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களா (தொழில்நுட்பம் மற்றும் உளவுத்துறை) டிவி ரவிச்சந்திரன், பங்கஜ் குமார் சிங்(உள்துறை), பவன் கபூர்(வெளியுறவுதுறை) உள்பட ராணுவம், கடற்படை, சைபர் வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கான நிதி என்பது குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.270.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2025-26 நிதி ஆண்டில் மொத்தம் ரூ.182.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும்போது சுமார் ரூ.88 கோடி குறைவாகும்.
அதேபோல் உளவுப்பிரிவுக்கான(Intelligence Bureau) நிதி ஒதுக்கீடும் ரூ.73 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.3,966 கோடி உளவுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை ரூ.3,893 கோடி வரை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு இந்த 2 பிரிவுகளும் மிக முக்கிய பங்காற்றி வரும் சூழலில் இந்த நிதி குறைப்பு என்பது பேசும் பொருளாகி உள்ளது.
இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவரிடம் ஆங்கில நாளிதழ் சார்பில் கேட்கப்பட்டுள்ளது. பெயர் கூற விரும்பாத அந்த அதிகாரி ‛‛தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் உளவு பிரிவுக்கு பட்ஜெட்டில் நிதி குறைப்பின் பின்னணி என்பது காரணத்துடன் தான் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் நோக்கம் 2 பிரிவகளிலும் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பதை குறிக்கும் வகையில் உள்ளது '' என்றார்.












Click it and Unblock the Notifications