பட்ஜெட் 2025.. வருவாய் வருவதும் கடன் மூலம்தான்.. வருவாய் செலவாவதும் வட்டிக்குதான்.. வெளிவந்த விவரம்
டெல்லி: நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாய் பெரும்பாலும் கடன் மூலமாகவும், அப்படி கிடைக்கும் வருவாயில் பெரும்பாலும் வட்டி கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் ஒரு லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் மூலமாக மிடில் கிளாஸ் மக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டிருப்பதால், மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்பது தெரிய வந்துள்ளது. இந்த பட்டிஜெட்டில் மத்திய அரசு கிடைக்கும் வருவாய் பெருமளவில் கடன் மூலமாகவும், அப்படி கிடைக்கும் வருவாய் பெரும்பாலும் வட்டி கட்டுவதற்கு பயன்படுவதும் தெரிய வந்திருக்கிறது.
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சுமார் 24 சதவிகிதம் கடன் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. அதன்பின் அதற்கு நெருக்கமாக 22 சதவிகித வருவாய் வருமான வரி மூலம் கிடைப்பது தெரிய வந்துள்ளது. ஜிஎஸ்டி மற்றும் மறைமுக வரி மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு 18 சதவிகித வருவாயும், கார்ப்பரேட் வரி மூலமாக 17 சதவிகிதமும் கிடைக்கிறது.
அதேபோல் அரசு நிறுவனங்கள் மூலமாக 9 சதவிகிதமும், சுங்கத்துறை மூலமாக 4 சதவிகிதமும், கலால் வரி மூலமாக 5 சதவிகிதமும், சொத்து விற்பனை மூலமாக 1 சதவிகித வருவாயும் கிடைக்கிறது. இப்படி கிடைக்கும் வருவாயில், மத்திய அரசு 22 சதவிகிதம் மாநில நிதி பகிர்வுக்கு அளித்து வருகிறது. அதேபோல் 20 சதவிகித வருவாய், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் செலவிடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து 16 சதவிகித வருவாய் மத்திய அரசின் திட்டங்களுக்கும், பாதுகாப்புக்காக 8 சதவிகித வருவாயும், மத்திய அரசின் மானியத்திற்காக 6 சதவிகித வருவாயும், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு 4 சதவிகித வருவாயும், மற்ற செலவுகளுக்காக 8 சதவிகித வருவாயும் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு அதிக நிதி கடன் மூலமாகவும், அப்படி கிடைக்கும் நிதி வட்டி கட்டுவதற்கும் மட்டுமே செலவிடப்படுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications