4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்.. மலராத தாமரை.. காங்கிரஸ், திரிணாமுல் அமோக வெற்றி
டெல்லி: மேற்கு வங்கம், சத்தீஸ்கார், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் 4 சட்டசபை தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தலா 2 இடங்களை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஒரு இடத்தை ராஷ்ட்ரீய ஜனதா தாளம் கட்சியும் கைப்பற்றியது.
மேற்கு வங்கம் மாநிலம் பாலிகங்கே, சத்தீஸ்கார் மாநிலம் கைராகர், பீகார் மாநிலம் போச்சான், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு என 4 சட்டசபை தொகுதிகளுக்கும், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த 5 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 12ல் அமைதியான முறையில் தேர்தல்கள் நடந்தன. ஓட்டுப்பதிவின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

ஓட்டுப்பதிவு எவ்வளவு
மேற்குவங்க மாநிலம் அரன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் 64.03 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது. மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே சட்டசபை தொகுதியில் 43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. சத்தீஸ்கார் மாநிலம் கைராகரில் 77.88 சதவீத ஓட்டுக்களும், பீகார் மாநிலத்தின் பேச்சான் தொகுதியில் 59.20 சதவீத ஓட்டுக்களும், மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் சட்டசபை தொகுதியில் 60.09 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.

இன்று ஓட்டு எண்ணிக்கை
மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அக்னிமித்ரா பால் களத்தில் உள்ளார். இதனால் இந்த தேர்தலில் இத்தொகுதி மிகவும் கவனம் பெற்றுள்ளது. அசன்சோல் உள்பட 5 தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது.

பாஜகவுக்கு பின்னடைவு
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே 4 சட்டசபை தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதி என 5 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கினர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், சத்தீஸ்கார், மகாராஷ்டிராவில் காங்கிரஸ், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்று வந்தனர்.

சத்ருகன் சின்ஹா வெற்றி
மேற்கு வங்கத்தின் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா களம் இறங்கினார். இவர் பாஜகவில் இருந்து சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இவரை எதிர்த்து பாஜகவின் வேட்பாளர் அக்னி மித்ரா களமிறங்கி இருந்தார். ஓட்டு எண்ணிக்கை முடிவில் சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தார்.

திரிணாமுல் வெற்றி
மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பாபுல் சுப்ரியா வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 50,996 ஓட்டுகள் பெற்று 20ஆயிரத்து 56 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிம் 30,940 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். பாஜக வேட்பாளர் கேயா கோஷ் 13,174 ஓட்டுகளுடன் 4ம் இடமும், காங்கிரஸ் வேட்பாளர் கம்ருஷாமன் சவுத்ரி 5,205 ஓட்டுக்களுடன் 4ம் இடமும் பிடித்தார்.

காங்கிரஸ் வெற்றி
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜாதவ் ஜெயஸ்ரீ சந்திரகாந்த் 97 ஆயிரத்து 16 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு பாஜக வேட்பாளர் சத்யஜித் கடம் 77 ஆயிரத்து 806 ஓட்டுக்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார். சத்தீஸ்கார் மாநிலம் கைராகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா 87 ஆயிரத்து 829 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 67 ஆயிரத்து 660 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.

பீகாரில் யார் வெற்றி
பீகார் போச்சான் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியி்ன வேட்பாளர் அமர் குமார் பஸ்வான் 82,547 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 45 ஆயிரத்து 889 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தருண் சவுத்ரிக்கு வெறும் 1336 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விகாஷில் இன்சான் கட்சி வேட்பாளர் கீதா குமாரி 29,276 ஓட்டுக்கள் பெற்று 3வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாஜக தோல்வி
இதன்மூலம் 4 சட்டசபை தொகுதி, ஒரு நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 5 தொகுதிகளிலும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதில் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், சத்தீஸ்கரில் காங்கிரசும் ஆட்சி செய்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி செய்கின்றன. இங்கு பாஜக ஆட்சியில் இல்லை. இருப்பினும் பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி செய்கிறது. இருப்பினும் பீகார் மாநிலம் போச்சான் சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications