75% தொகுதிகளில் பாஜக அவுட்.. அடித்து தூக்கிய "இந்தியா" கூட்டணி! இடைத்தேர்தல் முடிவுகளில் ட்விஸ்ட்
டெல்லி: இன்றைய தினம் பீகாரில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த சூழலில், மற்றொருபுறம் 7 மாநிலங்களில் நடந்த 8 இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இந்த 8 தொகுதிகளில் 3 தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மூன்று தொகுதிகளில் மாநிலக் கட்சிகளும், இரு தொகுதிகளில் மட்டுமே பாஜகவும் வென்றுள்ளது.
இன்று காலை முதலே பீகார் மாநில வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் பீகார் தேர்தல் முடிவுகளையே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இதற்கிடையே இன்றைய பீகார் சட்டசபைத் தேர்தலோடு சேர்ந்து 8 சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. அதில் 3 மாநிலங்களில் (தெலுங்கானா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட்) உள்ள தொகுதிகளில் இந்தியா கூட்டணி கைப்பற்றியது. ஜம்மு, ஒடிசா தொகுதிகளில் பாஜகவும், மிசோரம், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் மாநில கட்சியும் வென்றுள்ளது..

காஷ்மீர்
அதில் காஷ்மீரின் புட்காம் சட்டசபைத் தொகுதியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி முதலில் முன்னிலையில் இருந்தது. அங்குத் தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் ஜம்மு காஷ்மார் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் அகாதெமி சையத் முன்தாசிர் மெஹ்தி சுமார் 4400 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டர்.
பாஜக
அதேநேரம் அங்கு இடைத்தேர்தல் நடக்கும் மற்றொரு தொகுதியான நக்ரோட்டாவில் பாஜகவுக்கு ஆதரவான ஒரு சூழலே நிலவியது. பாஜக வேட்பாளர் தேவ்யாணி ராணா மிகப் பெரிய முன்னிலையில் இருந்தார். ஆளும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளரை விட சுமார் 24,500 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.
ஒடிசா நுவாபாடா சட்டசபைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அவர் சுமார் 83 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு காங்கிரஸ் 2வது இடத்திலும், பிஜு ஜனதா தளம் இப்போது 3வது இடத்திலும் தள்ளப்பட்டது.
இந்தியா கூட்டணி
ஜார்க்கண்ட் மாநிலம் காட்சிலா தொகுதியில் ஆளும் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு இருந்தது. சோமேஷ் சந்திரா சோரன் அங்கு மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். இறுதியில் சுமார் 38000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார். பாஜக வேட்பாளர் பாலு லால் சோரன் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள முக்கிய தொகுதி ஜூபிலி ஹில்ஸ். பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பிஆர்எஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸின் நவீன் யாதவ் சுமார் 24,700 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிஆர்எஸ் வேட்பாளர் மகந்தி சுனிதா கோபிநாத் 2வது இடத்தைப் பிடித்த நிலையில், பாஜக வேட்பாளர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
ராஜஸ்தானில் உள்ள ஆன்டா தொகுதியில் காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் ஜெயின் சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அங்கு பாஜக வேட்பாளர் மோர்பால் சுமன் மற்றும் சுயேச்சையாகப் போட்டியிட்ட நரேஷ் மீனா என்பவருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.
மாநிலக் கட்சிகள்
பஞ்சாப்பின் டார்ன் தரன் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி காத்திருந்தது.. அங்கு ஆம் ஆத்மி வேட்பாளர் ஹர்மீத் சிங் சுமார் 12,000 அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அங்கு அகாலி தள வேட்பாளர் சுக்விந்தர் கவுர் 2ம் இடத்தைப் பிடித்த நிலையில், காங்கிரஸ் கரன்பீர் சிங் 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்..
மிசோரம் மாநிலத்தின் டம்பா தொகுதியில் எதிர்க்கட்சியான MNF வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.. அவர் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அதிர்ச்சி தரும் வகையில் ஆளும் சோரம் மக்கள் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக 3 மற்றும் நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications