பிரதமர் மோடி கேபினட் கூட்டத்தில் அதிரடி முடிவு.. கரும்புக்கான ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: கரும்புக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 வரை உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (பிப்ரவரி21ஆம் தேதி) இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கேபினட் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 8% அதாவது ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், இதுவரை இல்லாத அளவில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ. 340 வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். விவசாயிகளின் நலனில் எப்போதும் பிரதமர் மோடி மிகுந்த அக்கறையுடன் செயல்படுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும், விண்வெளித்துறையில் நேரடி முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், வெள்ள மேலாண்மை மற்றும் எல்லைப் பகுதிகள் திட்டத்திற்கு 4,100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்புக்காக 'Umbrella Scheme' திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அனுராக் தாக்கூர், தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் தீவன விதை பதப்படுத்தும் உள்கட்டமைப்பை ஏற்படுத்தும் தொழில்முனைவோருக்கு 50% மூலதன மானியம் ரூபாய் 50 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி விரைவில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில், கரும்புக்கான நியாயமான சந்தை விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
